பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அட பாவிப் பிராமணா! என்னை உண்ணாவிரதம் இருக்கச் சொன்னீரே" என்று ஆத்திரத்தோடு கேட்டார். குப்பு சாஸ்திரிக்கு அப்போதுதான் நினைவு வந்தது. "அடடா! என்ன முட்டாள்தனம் செய்துவிட்டோம், அரைத்தூக்கத்திலே, உளறிவிட்டோமே. நமது குட்டு வெளிப்பட்டுவிட்டதே" என்று பதறி "இப்ப சாப்பிடவில்லை ஓய்! காலையிலே சாப்பிட்டது" என்று இழுத்தார். அவருடைய பேரன், கிட்டுப்பயல் ஒரு போக்கிரி. "ஏன் தாத்தா! புளுகிண்டிருக்கே. ஓய், மாமா! எங்காத்லே இப்போதான் அக்கார வடிசல் செய்தா" என்று உண்மையை உரைத்துவிட்டான். உள்ளே இருந்தும் ஒரு குரல் “பக்கத்தாத்து சர்மாவா? உமக்கும் ஒரு வட்டிலிலே தரட்டுமோ, கொஞ்சம் இருக்கு" என்று கேட்டது. குப்பு சாஸ்திரியின் முகத்திலே அசடு வழிந்தது. சர்மா, கோபத்தோடு, 'ஓய் நீர் ஓர் அயோக்யராக்கும். என்னை உண்ணாவிரதமிருக்கச் சொன்னீர். நீரும் இருப்பதா சத்யம் செய்தீர். இப்படி யாருங்காணும் சத்யம் செய்தூட்டு, திருட்டுத்தனமாச் சாப்பிடச் சொன்னா? உம்ம மானத்தை வாங்கவேண்டாமோ?" என்று சீறினார்.

குப்பு சாஸ்திரிக்குக் குளறத்தான் முடிந்தது. "இதோ பாருங்கொ சர்மா, இதைக் கேளுங்கோ..." என்று ஏதோ சமாதானம் செய்ய முயற்சித்தார். "என்னத்தைப் பார்க்குறதும், கேக்கறதும். இப்படிப்பட்ட அசத்யவாளர் இருந்தாலும், இவாளுக்குச் சொத்து உண்டு, பெண்களுக்கு இல்லைன்னு முறை இருப்பது ஒழிஞ்சாகவே வேணும், உம்மைப் போன்றவாளுடைய கொட்டம் அடங்க" என்று கூறிவிட்டு, வீட்டிற்கு வந்தார்! "ஏண்டி! சாம்பார் வத்தல்,துவையல் பூராவுமே தானம் செய்தூட்டாயோ,ஏதாகிலும் கொஞ்சமாவது இருக்கோ" என்று சகதர்மிணியைக் கேட்டார். "வயத்தைக் கிள்றதோ" என்று சகதர்மிணி கேட்டாள்.

49