பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 45


இன்றையத் தலைமுறையினரில் பேராசிரியர் கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலரும் அன்றும் சரி, இன்றும் சரி தமிழ் எழுத்துலகிலே குன்றிலிட்ட தீபங்களென. ஒளிகாட்டியும், வழிகாட்டியும் வந்தனர் : வருகின்றனர்.

“படைப்பிலக்கியத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது மணிக்கொடி. அக்காலத்தில், உண்மையான புரட்சிச் சிந்தனைகளை உண்மையாகவும் புதுமையாகவும் எழுதினார் புதுமைப் பித்தன்’. அவர் மாப்பஸான் முதலான பிற நாட்டு ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டவர் என்பது சிருஷ்டி ரகசியம் என்பதைக் காட்டிலும், சிதம்பரரகசியம் என்பது பொருந்தும். அவரை நினைவூட்டும் வண்ணம், பின்னர்: ‘விந்தன்’ சுடர் விடலானார்.

‘தான் குரு இல்லாத சிஷ்யர் என்பதாக அடிக்கடி பெருமையடித்துக் கொண்ட ஜெயகாந்தன். அவரை அறிந்தோ அறியாமலோ, மேலே கண்ட ‘விந்தன்’ எனும் புரட்சி எழுத்தாளரால் பாதிக்கப்பட்டவர் என்பதுதான் யதார்த்தமான நடப்பு. ஆகவே தான், விந்தன் அந்நாளில் புதுமைப்படுத்தி எழுதிய ‘பாலும் பாவையும்’ திறனாய்வையும் இங்கே வேறு பக்கங்களில் மறுபிரசுரம் செய்திருக்கிறேன். எனது இனிய நண்பராக அவரை அறிமுகப்படுத்தியது. ‘விந்தன்’ தொடங்கி முடித்த ‘மனிதன்’. சரஸ்வதி'யில் தொடர்ந்து எழுதியவர், அப்புறம் நான் பொறுப்பேற்று இலக்கியச்சோதனைகளை நடத்த ஏதுவாக அமைந்த ‘உமா’விலும் எழுதலானார். பிறகு, ‘சாவி’யின் அன்பினால் அவர் எழுதிய ‘ஒவர் டைம்’ என்கிற கதை ஆனந்த விகடனில் வெளியானதும், இலக்கியப் பசி கொண்டவர்கள் அவரைக் கவனிக்கத் தலைப்பட்டனர். ஒரு பிடி சோறு என்னும் அவரது முதலாவது சிறு கதைக் கொத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லைதான்.

“இச்சந்தர்ப்பத்தில் ஒர் உண்மையையும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே நியாயம்; தருமமும் கூட.