பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



கடைசியில் சில வரிகள்.

பாலும் பாவையும் கதையில் உங்களுடைய ‘கிண்டல் பாவமும், நம்பிக்கை வறட்சியும் தோய்ந்த எழுத்து நடையை நான் மனம் பிணைத்து அனுபவித்தேன். சமுதாயத்தின் சித்திரம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கடவுளின் பெயரால் செய்யப் பெறும் மோசடிகள், இலக்கியக் கலையுலகின் நடைமுறைப் போக்கு- இப்படிப்பட்ட சூழல்களிலே உங்கள் ‘பேனா’ சுழலும்போது, உங்கள் ‘தனித்தன்மை’யைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் உங்களுக்கே உரித்தான குறிக்கோள் தன்மை'யை- (ideal self) இந்த நெடுங்கதையில் இனம் காணவே இயலாமற் போய் விட்டது ! இன்னும் ஒரு பிழை. அகல்யாவிலிருந்து சமையல்காரன் வரை எல்லோருக்குமே நீங்கள் இரவல்குரல் கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் நோக்கு புதிது. போக்கு, பழசு! உங்கள் கரு அற்புதம்: உரு, குறைப் பிரசவம் ! ஆத்ம விசாரம் இருக்கும் அளவுக்கு ஆத்ம விசாரணை இல்லையே- ! பிர்ச்சனையும் புதிதல்ல ; தீர்வும் தீர்வு முறையும் கூட புதிதல்லதான் !

‘வையம் பேதமையற்றுத் திகழ வேண்டுமென்று எதிர்பார்த்து, பெண்களின் அறிவவை வளர்க்க இக்கதையை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்து நீங்கள் இவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறீர்களென்றே வைத்துக் கொள்வோம், நம் தமிழ்ச் சமுதாயம் இப்படித்தான் அமைந்திருக்கிறதென்பதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், நம் சமூகம் இப்படி இப்படி அமைந்தால்தான், இத்தகைய தவறுகளிலிருந்து அகல்யாவைப் போன்ற அபலைகள்- தமிழ் அபலைகள் நல்ல விடிவு கண்டு வாழ வழி பெறுவார்கள் என்ற ஒர் ஊகத்துக்குரிய தார்மீக அடிப்படையாவது நீங்கள் வழி காட்டியிருக்க வேண்டாமா ?

‘விந்தன்’ என்ற பெயரைக் குறிப்பிடும்போது, ‘ஒ’ பாலும் பாவையும் விந்தனா ? என்று இன்றும் நண்பர்கள் பலர் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான், - நான்காணும் ‘பாலும் பாவையும் விந்தன்’ அவர்களை அந்த நண்பர்களுக்கு இக்கடிதத்தின் வழியாக அறிமுகம் செய்ய வேண்டியவன் ஆனேன் !