பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 3.19. ஆணையிட்டுக் கூறியதால் இவரைப் பெருமக்கள் ஆணை நமதென்ற பெருமாள் எனப் பாராட்டிப் போற்றுவர். பாடல்களின் செய்திகள் : ஞானத் திருவுருவாகிய பிள்ளையார் அருளிய திருப்பாடல்கள் யாவும் உமையம் மையார் அளித்த திருவருள் ஞானமாகிய பாலடிசிலைப் பருகிய மகிழ்ச்சி நிலையில் எழுந்தவை. சிவனடியே சிந்திக்கும் அவர் உள்ளத்திலிருந்து பொங்கி எழுந்து பொழிந்த உயர் ஞானத் திருமொழிகளாகும் இவை. இத் திருப்பாடல்கள் இயற்கைப் பொருள்களின் எழில் நலங்களை எடுத்தியம்பும். அந் நலங்களில் பிரிவறத் தோய்ந்து இன்பஞ் செய்யும் இறைவனின் திருவருள் வனப்பை விரித்துரைக்கும். மேலும் இவை நானிலத்து ஐந்திணை வருணனைகளைச் சந்தம் மலிந்த செந்தமிழ்ச் சொற்களால் இசை நலம் பொருந்த எடுத்துரைக்கும் பான்மையன. பாடிய வாய் தேனுாறும் பான்மையுடைய இத்திருப்பாடல்கள் பாடுவோர்க்கும் கேட்போருக்கும் தெவிட்டாத தீஞ்சுவை அமிழ்தத் தன்மையனவாய்த் திகழ்பவை. இவை தவிர, இறைவன் ஒருவனுளன் என்ப தற்குரிய பிரமாணங்கள், அம்முதல்வனுக்குரிய பொதுவும் சிறப்புமாகிய இலக்கணங்கள், இறைவனை வழிபடுதற்குரிய இன்றியமையாத சாதனங்கள், வழிபாடு செய்யும் அடியார்கள் பெறும் நற்பயன்கள் முதலியவற்றை துவல் வனவாகவும் இருக்கும் இத் தெய்வச் செந்தமிழ் நறுமலர்கள். பாடல்களின் சிறப்பமைப்பு: சம்பந்தர் பெருமான் அருளிய திருப்பதிகங்களில் பெரும்பாலானவை பதினொரு திருப்பாடல்களைக் கொண்டவை. திருப்பிரமபுரத் திருப்பதிகங்களில் சில அத்தலத்திற்கு அமைந்த பன்னிரு திருப்பெயர்களையும் பரவிப் போற்றும் கருத்துடன் பன்னிரண்டு திருப்பாடல்களாக வளர்ந்துள்ளன. சைவ சமயத்தின் நுண் பொருள்களை விளக்கும் முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/360&oldid=856394" இலிருந்து மீள்விக்கப்பட்டது