பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

21



நாளெடுத்துக் கூறிடினும் நம்பகையால் வந்தவர்க்குக்
கேடொன்றும் சூழாக் கிழவரிவர் நெஞ்சத்தில்
சூடொன்றப் பேசிடினும் தோழமைக்குத் தந்தையிவர்
வன்முறைகள் நாடா வலியரிவர் தம் கருத்தைச்
சொன்முறையால் நற்புரட்சி தோற்றுவித்த வீரரிவர்
பார்போற்றும் வண்ணம் பகுத்தறிவுக் கல்லூரிச்
சீர்போற்றி நின்றிலங்கச் செய்யும் முதல்வரிவர்
தென்னாட்டை மீட்கத் திறல்காட்டி நம்பகைவர்
வெந்காட்டி[1] ஓடச்செய் வெண்தாடி வேந்தரிவர்
இந்தி எனும்பெயரால் இங்குவரும் ஆதிக்கம்
முந்தித் தொலைத்துவிட மூட்டும் பெருநெருப்பு
தங்கமுடி யாமல் ததும்பிவரும் சிந்தனைகள்
பொங்கி வழிகின்ற புத்தறிவுப் பேருற்று
சாதி சமயங்கள் சாத்திரங்கள் என்றுபல
ஓதும் மடமை உடைக்கும் வெடிமருந்து
நல்ல குடியரசும் நாடும் விடுதலையும்
வெல்லும் படிதந்த வீரத் தலைவரிவர்
உய்வ்வண்ணம் ஆய்ந்தறிந் தோய்வே அறியாமல்
செய்யரிய செய்து பெரியார் எனவானார்
நாட்டை அடிமைக்குள் நட்டு மிடிமைக்குள்
வாட்டி நமையாண்ட வஞ்சகத்து வெள்ளையரை
ஓட்டுதற்குப் பாடுபட்ட ஓரியக்கம் பேரியக்கம்
காட்டும் நெறிநின்று கடுஞ்சிறையுட் புக்கதெலாம்
நாடறியும், அந்நாள் நலிவுற்ற ஓரினத்தைப்
பீடுபெறச் செயவதற்குப் பிற்போக்கு வைக்கத்தில்
காட்டிய அத்துணிவைக் கண்டவர்கள் வீரரென
ஏட்டில் எழுதி எடுத்துப் புகழ்ந்தார்கள்
நாட்டிற் குழைத்தஇவர் நம்மினத்தின் மேன்மைக்குக்
கேட்டார் சிலவுரிமை கேட்டும் மறுத்ததனால்
காஞ்சிபுர மாநாட்டில் கண்சிவக்கப் பேசிவிட்டு
வாஞ்சைகொளும் நம்பெரியார் வந்தார் வெளியேறி
எங்கள் இனத்துரிமை ஏற்றம் பெறவந்த
சிங்கம் நிகர்தலைவர் சீர்மைமிகு காஞ்சியிற்றான்
ஏற்றமிகும் அண்ணா இனப்போர்ப் படைத்தலைமை
ஏற்கத் தகுதியுளார் என்று தெரிந்தெடுத்தார்
நாடு பிரிவதுதான் நன்மை பயக்குமென
நாடி முடிவெடுத்தார் நல்லாரூர் தன்னில்
பிரிவினைக்கு வித்திட்ட பேர்பெற்ற அவ்வூரில்
உரிமைக் குரல் தந்(து)- உறவுக்குக் கைதந்து


  1. வெந்காட்டி - புறமுதுகுகாட்டி