பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஞாயிறும் திங்களும்



இன்றைய நாடு


அயில்வேலும் உடைவாளும் உண்டான நாடு - இன்று

அயலார்கள் அரசாளச் சரிபோடும் நாடு
- அயில்

வயல்யாவும் கயல்பாயும் புனல்சூழும் நாடு
வயிறார உணவார இயலாத நாடு
மயிலாடும் குயில்பாடும் வளமான நாடு

மனம்நோகத் தெருவோரம் குடிவாழும் நாடு
- அயில்

தலையான நெறிகண்டு புகழோடு நின்றோர்
தன்மானங் கெடும்போதும் உணராத நாடு
தலைநாளில் மொழிமூன்று வகையாகி நின்றும்

தமிழாலே இசைபாடத் தெரியாத நாடு
- அயில்

கதையாகக் கனவாக எதையேனும் சொல்வார்
காணாத உலகாள வழியோதிச் செல்வார்
பொதுவாகும் பொருள்யாவும் எனுமாறு நாடிப்

புதுவாழ்வு நனவாக முயலாத நாடு
- அயில்

அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை
ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை
நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில்

நினைகின்ற பயனேதும் விளைவாவ தில்லை
- அயில்

அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார்
அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார்
மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார்

வழியேதும் தெரியாத விழியாத கண்ணார்
- அயில்

புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும்
புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும்
செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா?

சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார்
- அயில்

பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து
பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன?
அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார்

அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார்
- அயில்
24-6-1979