பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டால்ஸ்டாய் கதைகள்

மேல் ஏறிவிட முயற்சித்தான். ஆனால் அவனுடைய பாரத்தினால் வண்டி ஒரு பக்கமாய் சாய்ந்து விட்டது. அதனால் மறுபடியும் அவன் தோல்வியுற்றான். அப்புறம் அவன் குதிரையை வண்டிக்குச் சமீபத்தில் இழுத்து, ஜாக்கிரதையாகச் சமாளித்து வண்டியின் ஓர் புறமாக நின்று குதிரையின் முதுகு மேல் குறுக்காகப் படுத்து விட்டான். இவ்வாறு கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்த பிறகு அவன் முன்னால் ஒரு முறை நகர்ந்து கொடுத்தான். மீண்டும் நகர்ந்தான். பிறகு ஒரு காலைத் தூக்கிப் போட்டு, கடைசியில் நன்றாக உட்காருவதில் வெற்றி பெற்றான். அடிப்புறத்தில் தொங்கிய தோல் வார்களில் தனது கால்களை உறுதியாகப் பதிய வைத்துக்கொண்டான் அவன்.

வண்டியின் அசைவு நிகிட்டாவை எழுப்பியது. அவன் எழுந்து உட்கார்ந்தான். அவன் என்னவோ சொன்னதாக வாஸிலிக்குத் தோன்றியது.

‘உன்னைப் போன்ற முட்டாள்களின் பேச்சைக் கேட்க வேண்டியது தான்! ஒன்றும் இல்லாததற்காக நான் இப்படிச் சாவதா என்ன?’ என்று வாஸிலி கத்தினான். அப்புறம் தனது ரோம அங்கியின் விளிம்புகளைச் சுருட்டி முழங்கால்களுக்குக் கீழே திணித்துக்கொண்டு அவன் குதிரையைத் திருப்பினான். வண்டியிலிருந்து விலகி, காடும் காட்டுக் காவலாளியின் குடிசையும் இருந்தாக வேண்டிய இடம் என அவன் கருதிய திக்கு நோக்கிக் குதிரையை ஓட்டினான்.