பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

டால்ஸ்டாய் கதைகள்

பெற்றான். அதனால், ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று உயிர்த்தான் அவன். சாக்குத்துணியைத் தனது தலைக்கு மேலே போட்டுக் கொண்டு அவன் வண்டியினுள் நுழைந்தான். அங்கே முன்பு தனது எஜமான் படுத்துக்கிடந்த இடத்தில் அவன் படுத்தான்.

எனினும் வண்டியின் உட்புறத்திலே கூட அவன் கதகதப்பு பெறமுடியவில்லை. முதலில் அவனது தேகம் முழுவதும் குளிரால் நடுங்கியது. பிறகு நடுக்கம் நின்றுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் நினைவை இழக்கலானான். அவன் செத்துக் கொண்டிருந்தானா, அல்லது தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தானா என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டில் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தான் அவன்.

8

வாஸிலி ஆன்ட்ரீவிச் என்ன காரணத்தினாலோ நம்பினான், காடும் காட்டுக் காவல்காரனின் குடிசையும் அந்தத் திக்கிலேதான் இருக்கவேண்டும் என்று. அதனால் அத்திக்கு நோக்கியே அவன் குதிரையை விரட்டினான். அடிக்கடி தனது கால்களினாலும், கடிவாள வார்களின் நுனியாலும் அதை முடுக்கிக் கொண்டிருந்தான். பனி அவன் கண்களுக்குத் திரையிட்டது. அவனை நிறுத்திவிடுவது என்ற லட்சியத்தோடு காற்று வீசியதாகத் தோன்றியது. ஆனால், அவனோ, முன்னோக்கிக் குனிந்து கொண்டு, அடிக்கடி கோட்டைச் சரியாக இழுத்து தனக்கும் குளிர்ச்சியான சேணத்துக்கும் இடையிலே அதைச் சொருகிவிட்டுக் கொண்டு, குதிரையை மேலும் வேகமாகச் செல்லும்படி தூண்டி வந்தான்.