பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

137

தான் அந்த மாதிரி வேலை செய்திருக்க முடியும். வீடு உள்ளே தாழிட்டுப் பூட்டப்பட்டிருந்தது. அங்கே வேறு ஆளே கிடையாது. இதோ ரத்தக்கறை படிந்த கத்தி உன் பையிலிருந்து கிடைத்தது. உன் முகமும் உனது நடத்தையும் உன்னைக்காட்டிக் கொடுக்கின்றன. உண்மையைச் சொல்லிவிடு. நீ அவனை எப்படிக் கொலை செய்தாய்? எவ்வளவு பணம் திருடினாய்?” என்று கேட்டார் அந்த அதிகாரி.

தான் கொலை செய்யவில்லை; இரண்டுபேரும் சேர்ந்து டீ குடித்துவிட்டுப் பிரிந்த பிறகு தான் அவ் வியாபாரியைப் பார்க்கவே இல்லை; தனது சொந்தப் பணமான எட்டாயிரம் ரூபிள்களைத் தவிர தன்னிடம் வேறு பணமே கிடையாது; அந்தக் கத்தி தன்னுடையது அல்ல என்று அக்ஸனோவ் சத்தியம் செய்தான். ஆனாலும், அவன் குரல் கம்மியது. அவன் முகம் வெளிறித் தோன்றியது. அவனே குற்றம் செய்து விட்டவனைப்போல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவனைக் கட்டி வண்டியில் ஏற்றும்படி அதிகாரி உத்திரவிட்டார். வீரர்கள் அவன் கால்களை இறுகப் பிணைத்து அவனை வண்டியினுள் தள்ளியபோது, அக்ஸனோவ் சிலுவை அடையாளம் செய்து கண்ணீர் வடித்தான். அவனது பணமும் சரக்குகளும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டன. அருகில் உள்ள நகரின் சிறைக்கூடத்துக்கு கைதியாக அனுப்பப்பட்டான் அவன்.

அவனுடைய நடத்தையைக் குறித்து விளாடிமிர் நகரத்தில் விசாரணை செய்யப்பட்டது. முன்பெல்லாம் அவன் குடித்து வீண்பொழுது போக்கி வந்தான்;