பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டால்ஸ்டாய் கதைகள்


அவன் தான் ஐஸே. வாஸிலிக்குப் பழக்கமான ஒரு விவசாயி. அந்த வட்டாரத்தில் முக்கியமான குதிரை திருடி என்ற கீர்த்தியும் பெற்றிருந்தான் அவன்.

‘ஆ, வாஸிலி ஆன்ட்ரீவிச்! எங்கே ஐயா கிளம்பி விட்டீர்?’ என்று விசாரித்தான் ஐஸே. அவன் குடித்திருந்த வோட்கா மதுவின் நாற்றம் நிகிட்டாபேரில் கவியும்படி பேசினான் அவன்.

‘நாங்கள் கோர்யாச்கினுக்குப் போகலாமென்று கிளம்பினோம்.’

‘இங்கே வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்பது தெரிந்ததா? நீங்கள் மோல்ஷனோவ்கா வழியாகப் போயிருக்க வேண்டும்.’

‘போயிருக்க வேண்டியதுதான். ஆனால் தவறி விட்டோம்’ என்று சொல்லி வாஸிலி குதிரையை இழுத்துப் பிடித்தான்.

‘இது அருமையான குதிரை’ என்றான் ஐஸே. கள்ளப் பார்வையால் குதிரையைக் கவனித்தபடியே அதன் மயிரடர்ந்த வாலில் அவிழ்ந்து தளர்ந்திருந்த முடிச்சைத் தூக்கி இறுக்கினான். அச்செயலில் பழக்கத்தினால் தேர்ந்த லாகவம் வெளிப்பட்டது.

‘இராத்திரி இங்கேயே தங்கப் போகிறீர்களா?’ என்று அவன் கேட்டான்.

‘இல்லை, நண்பரே. நான் போயாக வேண்டும்’ என வாஸிலி அறிவித்தான்.

‘அப்போ ரொம்பவும் அவசரமான வேலையாகத்தான் இருக்கும். இது யார்? ஆ, நிகிட்டா ஸ்டீபனிச் தானா!’