பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

69

மாகவே நடந்து, குதிரை நின்றிருக்க வேண்டிய இடம் தேடிச் சேர்ந்தான். அங்கே குதிரையையோ வண்டியையோ காணமுடியவில்லை. எனினும், காற்றை எதிர்த்து அவன் நடக்கத் தொடங்கியதும் வாஸிலி ஆன்ட்ரீவிச்சின் கூப்பாடுகளையும், முக்கார்ட்டியின் கனைப்பையும் அவனால் கேட்க முடிந்தது.

‘நான் இதோ வருகிறேன். வந்து கொண்டிருக்கிறேன். எதற்காக இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று முனங்கினான் அவன்.

வண்டிக்குப் பக்கத்தில் வந்த பின்னரே, குதிரையையும் அதன் அருகே பூதாகாரமாகத் தோன்றும்படி நின்ற வாஸிலியையும் அவன் கண்டுகொள்ள முடிந்தது.

‘நாசமாய்ப் போன நீ எங்கே தொலைந்து போனாய்? நாம் திரும்பிவிட வேண்டியது தான். கிரிஷ்கினோவுக்கே போனாலும் சரி’ என்று வாஸிலி நிகிட்டாவைக் கடிந்து கொண்டான்.

‘திரும்பிப் போக எனக்கும் சந்தோஷமாகத் தானிருக்கும், வாஸிலி ஆன்ட்ரீவிச். ஆனால் நாம் எந்த வழியாகப் போவது? இங்கே பெரிய கணவாய் ஒன்று இருக்கிறது. அதற்குள்ளே ஒரு தடவை விழுந்து விட்டால், அப்புறம் வெளியேறுவது என்பது சாத்தியமில்லை. அங்கே அகப்பட்டுக்கொண்டு திணறிய நான் வெளியேறி வந்தது பெரும்பாடுதான்’ என்றான் நிகிட்டா.

‘பின்னே நாம் என்ன செய்வது? இங்கேயே தங்கியிருக்க முடியாது. நாம் எங்காவது போய்த்தான் ஆக வேண்டும்.’ என்று வாஸிலி சொன்னான்.