பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டால்ஸ்டாய் கதைகள்

அமைந்திருந்தது. காற்று ஓர் சிறிது ஒடுங்கி விட்டதாக எண்ண வைத்த சந்தர்ப்பங்கள் அநேகம் ஏற்பட்டன. ஆனால் அவை நீடித்திருக்கவில்லை. கொஞ்சம் வேகம் குறைந்ததற்கு ஈடு செய்வது போல புயல் பத்து மடங்கு பலத்துடன் கீழ்நோக்கிப் பாய்ந்தது; கடுமையாகப் பிய்த்து அடித்துச் சுழன்றது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் சுவாசம் சரியாகப் பெற்றதும் வண்டியிலிருந்து இறங்கி, இனிமேல் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஆலோசிப்பதற்காக நிகிட்டாவிடம் சென்ற தருணத்தில் இத்தகைய காற்று வீச்சுதான் அவர்கள் மேல் சாடியது. அவ்விருவரும் தாமாகவே பணிந்து தாழ்ந்து, காற்றின் வேகம் தணியட்டும் என்று காத்திருந்தனர். முக்கார்ட்டி, கூடத் தனது காதுகளைப் பின்பக்கமாகச் சாய்த்து ஒடுக்கி, அதிருப்தியோடு தலையை அசைத்துக் கொண்டது.

காற்றின் கடுந்தாக்குதல் குறைந்த உடனேயே நிகிட்டா கையுறைகளைக் கழற்றி, அவற்றை இடுப்புக் கச்சையில் சொருகிவைத்தான். தனது கைகள் மீது வாயினால் ஊதிக்கொண்ட பிறகு, அவன் வண்டிச் சட்டத்தின் இணைப்புகளை அவிழ்க்கத் தொடங்கினான்.

‘அங்கே என்ன செய்கிறாய்?’ என்று வாஸிலி கேட்டான்.

‘வண்டியிலிருந்து குதிரையை அவிழ்த்து விடுகிறேன். செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது? என்னிடம் இனி பலமே இல்லை’ என்று நிகிட்டா தனது செயலுக்கு சமாதானம் கூறுவதுபோல் பேசினான்.