பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தகடூர் யாத்திரை


சேரரது ஆதிக்கம் படிப்படியாக விரிவடைந்து தங்கள் நாட்டின் எல்லை வரைக்கும் வந்துகொண்டிருப்பதை அறிந்ததும். அதிகர் குடியினர் கவலைகொள்ளத் தொடங்கினார்கள், தங்கள் நாட்டைக் காத்துக்கொள்வதற்கான தற்காப்பு ஏற்பாடுகளை முயற்சியுடன் மேற்கொண்டு, தம்முடைய வலிமையைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

இடையில் இருசாரருக்கும் நண்பரும் அன்பருமாக விளங்கிய சான்றோர்களின் தூது முயற்சியும் நிகழ்ந்தது. எனினும், இருசாரராலும் சமாதானமாகப் போவதற்கு இயலவில்லை.

எங்ங்னமும் தகடூரைக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற உறுதி இரும்பொறையிடம் இருந்தது. இரும்பொறையைக் களத்தே எதிரிட்டு வெல்வது கடினமாதலின், கோட்டையைக் காத்து நின்று, அழியும் வரைக்கும் போராட வேண்டுமென்ற திண்மை அதிகமானிடம் இருந்தது.

இருதிறத்தாரிடம் இப்படி உறுதிப்பட்டுப் போன போர்வெறி ஏற்பட்டிருந்த காரணத்தாலும், இருவரும் மிகவும் வலிய ஏற்பாடுகளுடனேயே போரியற்றிய காரணத்தாலும், இந்தப் போரின் நிகழ்வுக்கு ஒரு தனிச் சிறப்பு வரலாற்றில் ஏற்படலாயிற்று.

இனி, இந்தச் சூழ்நிலையில், கொல்லிக் கூற்றம் எனப்படும் பகுதிக்கண் இருந்த வல்வில் ஓரி என்பான், பர்விவரும் சேரப் பேரரசிற்குத் தடையாக இருந்தான். இவ்வல்வில் ஒரியினது வில்லாற்றல், சேரரை ஒருகணம் திகைப்படையச் செய்யாமலும் இல்லை. தகடூர் நாட்டுக்குத் தெற்காகக், காவிரியின் கீழ்க்கரைக்கும், கொல்லிமலைக்கும் இடைப்பட்டுக் கிடந்தது இந்த நாடு, இதனை வென்றாலொழியத் தகடூரைச் சார்தல் இயலாத காரியமெனக் கருதிய சேரர்கள், அந்நாளில் திருக்கோவலூரிலிருந்து ஆண்டுவந்த மலையமானின் துணையினை நாடினர்.

மலையமான் பெரும்படையுடன் சென்று போரிடக் கொல்லிக் கூற்றம் விழுந்தது. கொல்லியின் வீழ்ச்சி, தகடூர் அதிகமானைக் கவலைக்கு உள்ளாக்கிற்று. அவன், மலைய மானின் செயலை நினைந்து வேதனைப்பட்டான்.செல்வத்திற்கு விரும்பிப் பகையேதும் இல்லாத காலத்திலேயே, சேரர்க்குக் கூலிக்கு உதவிநின்ற மலையமானின் செயலை எண்ண எண்ண, அதிகமானின் ஆத்திரம் மிகுந்தது. அவனை அழித்தால், ஒழிய வேறு வழியில்லை என்ற முடிவிற்கு அதிகமான் வந்துவிட்டான்.