பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪

நூன்முகம்

கும் இணங்க காவிரிபுராணக் கதை முற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.

தக்ஷிண தேசத்தின்கண் உள்ள சகல ஜாதியாருக்கும் காவேரி ஒரு திவ்ய தீர்த்தமாய் இருப்பினும், அதன் உற்பவ ஸ்தானமான தலைக்காவிரி குடகமலையில் இருப்பதனால், காவிரியுற்சவம் குடகநாட்டாரால் மகா முக்கியமாகக் கொண்டாடப்படுகின்றது. மற்றெந்த உற்சவத்திலும் அதுவே அவர்களுக்கு விசேஷமானது.

காவிரி உற்சவம் ஐப்பசி மாதத்தில் நடக்கும்; அதுதான் மலையாள தேசத்தாருக்கு மழைகால இறுதி. குடக நாட்டாருக்கு அதுவே மிகக்கொடிய மாரியாம். அது மாறி, தக்ஷணாயன முடிவாகிய மழைக்காலத்தில் வெகு நாளைக்குக் கண்ணுக்குத் தோற்றாத சூரியன் அப்பொழுது நல்ல பிரபை கொண்டு ஒளிர்வன். கழனிகளெல்லாம் நெல் விளைந்து தலை சாய்ந்து பார்த்தவர் மனம் களிக்கச் செய்யும். தேசம் முழுதும் பாலைகளிலும் காடுகளிலும் புல் வளர்ந்து பச்சென்றிருக்கும். புதுச்சல வரவினால் நீர் ஊற்றுக்கள் யாவும் உன்னதமாய்ப் பாய்ந்து ஒலிக்கும். உற்சவத்திற்குக் குடகநாடு முழுவதிலும் ஒவ்வொரு வீட்டிலுமிருந்து இரண்டொருவரேனும் தலைக்காவேரிக்கு வராமலிரார்.

மலையாளம் துருவம் மைசூர் என்ற இத்தேசங்களிலிருந்து அத் திவ்ய க்ஷேத்திரத்திற்கு யாத்திரைக்காரர் ஆயிரக்கணக்காக வந்தபடியே இருப்பார்கள். அவர்களுள் அநேக பிராமண விதவைகள், தமது அமங்கலிய நிலைமைக்கேற்கக் கறுப்புப்புடவையாவது, ஊதாப்புடவையாவது தரித்துக்கொண்டு முண்டிதமாய் வருவார்கள். இவர்களும், சோலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்வந்து இறங்கி இருந்தவர்களும் பசுமையான மலைச்சாரலின் வழியாக ஏறிப் பவனி செல்வார்கள். செல்லும் போது தலைக்காவிரிமலை கண்ணிலே தென்படும். பின்பு மலையடிவாரத்தில் தாமிர ஓட்டால் வேய்ந்த பாகமண்டலாலயம் தெரியும். போகிறவர்கள் பல்லாயிரம், வருகிறவர்கள் பல்லாயிரமாக அவர்கள் இரைச்சல் கடல் முழுக்கிலும் அதிகமாய் ஒலிக்கும். பாதை இருபக்கமும் கைக்கூடாரங்களிலும் பாய்ப் பந்தல்களிலும் சிறு கடைக்காரர் தம் வியாபாரப் பொருள்களைத் தமக்கு முன்னே பரப்பிவைத்துக்கொண்டிருக்கக் காணலாம்.