பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

133



“என்னம்மா தேவகி. நீ தமிழ் படித்திருக்கிறாயே, இந்தப் பாட்டு யார் பாடினது, சொல்லு, ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு’ என்று தொடங்கும் பாட்டு.”

“இதில் என்ன சந்தேகம் வந்தது? மகாகவி பாரதியார் பாடிய பாட்டு.”

“அசடே, அசடே! வேதநாயகம் பிள்ளை பாட்டல்லவா இது?”

“ஞாபகப் பிசகாகச் சொல்கிறீர்கள் பாரதியார் பாடினது.” நாயுடு கலகலவெனச் சிரித்துக்கொண்டே, “இல்லவே இல்லை, பாரதியார் இதைப் பாடியதில்லை. வேதநாயகம் பிள்ளை பாடியதாகக் கூறப்பட்டது. இதுகூடத் தெரியாமலா தமிழ் இலக்கியம் படிக்கிறேன் என்கிறாய்!” என்றார்.

“பாரதியார் பாடியது என்று நிச்சயமாகச் சொல்வேன்” என்று உறுதியாகச் சொன்னாள் தேவகி.

“பந்தயம் ஆயிரம் ரூபாய். வேதநாயகம்பிள்ளை பாடியதுதான்.”

“பந்தயம் போட நான் தயாராக இல்லை. என்னிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. சந்தேகமே இல்லாமல் பாரதிதான் பாடினார் என்று சொல்கிறேன்.”

“அந்தக் கண்ணாடி பீரோவில் புத்தகங்கள் இருக்கின்றன. பாரதியார் கவிதைத் திரட்டை எடுத்துக் காண்பி. அதிலே இந்தப் பாட்டு இருந்தால் நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். இல்லாவிட்டால் நீ எனக்கு ஒன்றும் தரவேண்டாம்.”

தேவகி புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதிலே அந்தப் பாடலைக் காண்பித்தாள்.

“நான் தோற்றுப் போனதாக ஒப்புக்கொள்கிறேன். உனக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுகிறேன்.”

“ஆயிரம் ரூபாயா? எதற்காக? நான் அவ்வளவு ரூபாய் வாங்கிக் கொள்ளும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று வியப்புடன் கேட்டாள் தேவகி.

“பந்தயத்தில் தோற்றுப்போனால் நிபந்தனைப்படி நான் கொடுத்துதானே ஆகவேண்டும்?” என்று சொல்லிக்கொண்டே தலையணையடியிலிருந்து சாவியை எடுத்து, தேவகியிடம் கொடுத்து, “அந்த இரும்புப் பெட்டியைத் திற, அதிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்” என்றார். தேவகிக்கும் பயமாக இருந்தது. “வேண்டாம், வேண்டாம்; எனக்குப் பணம் வேண்டாம்” என்று சொன்னாள்.

நாயுடு சாவிக்கொத்தை மறுபடியும் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு,“தேவகி, நீ எவ்வளவு கெட்டிக்காரியாக