பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

சோலை சுந்தரபெருமாள்


தெரியப்படுத்தினர். வேறு சிலர், அந்தக் கிராஸிங் கதவருகில் அரக்கனின் கண்ணைப் போல் ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கை அமைதியாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படியாகத்தானே அங்கு ஜனநாயக தத்துவத்தின் ஒரு வீரியப்பகுதிய பிண்டப்பிரமாணமாக உருவாகிக் கொண்டிருந்தது!

ஆனால் அந்தச்சாலையின் இரு முனைகளிலும் குழுமி நின்ற நூற்றுக்கணக்கான ஜனங்களுடையவும் ஆத்திர அவசர கோபதாபக் குமுறல்களைக் கொஞ்சமும் சட்டை செய்யாதவனாய்- அத்தனை பேருடைய உரிமைகளையும் பறித்து, அவ்வளவு பேரையும் தடுத்து நிறுத்திப் போட்டுவிட்ட பெருமையில் திளைத்தவனாய்-லெவல் கிராஸிங்கின் உள்ளே, ரயில் பாதையோரம், கம்பீர நடைபோட்டுக் கொண்டிருந்தான் கேட் கீப்பர். ஆயிரக்கணக்கான கண்கள் அவனைக் கொத்திப் பிடுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பதைக்கூட லட்சியம் செய்யாமல், ருத்திரவெளியில் தன்னந்தனியே உலாவும் மந்திரவாதியைப் போல, பச்சைக் கொடிக் கருணையைக் கட்கத்தில் இடுக்கிக் கையைப் பின்னால் கோத்தவாறு உலாவிக் கொண்டிருந்தான். அவன் ஐந்து நிமிஷத்திற்கொருதரம் என்று அந்த லெவல் கிராஸிங் கதவுகளைச் சாத்தித் திறந்துவிடும் தொழிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் செய்துவரும் அவனுக்கு இது பழகிப்போன, புளித்துப்போன அனுபவம். எனவே, தன்னைச்சுற்றி ஒன்றுமே நடவாத மாதிரி உல்லாச நடைபயின்று கொண்டிருந்தான் அவன், பொறுமையிழந்த சில இளைஞர்கள் இரும்புக்கிராதியின் இடுக்குகளில் நுழைந்து ரயில் பாதையைக் கடக்க முயலும்போதெல்லாம், அவர்களை விரட்டியடித்து ஜபர்தஸ்து செய்வது அவனுக்கு ஒரு பொழுதுபோக்காயிருந்தது.

அது ஆபீஸ் நேரம். கர்ப்பிணிக் கோலம் பூண்ட இரண்டு மின்சார ரயில் வண்டிகள் தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் ஓடி மறைந்த பின்னும், சிவப்பு விளக்குகள் அணையவில்லை. கதவுகள் திறக்கப்படவில்லை. தேங்கிநின்ற ஜனப்பிளயத்தின் குமுறல் மிகுதியாயிற்று.

“இது என்ன சார், நியாயம்? ரயில் வண்டியில் போகிறவர்களும், பாட்டைசாரிகளும் இந்த ஜனநாயக நாட்டில் சமஉரிமை பெற்றவர்கள்தாமே? அவர்களை மட்டும் முன்னால் போக அனுமதித்துவிட்டு, நம்மைமட்டும் மடக்கிப் போட்டு வைப்பதேன்? ஒரே காரியாலத்தில் வேலை செய்யும் இருவரில் ஒருவர், ரயில் டிக்கெட் வாங்கி முன்னதாகப் போகிறார்; பஸ் டிக்கெட் வாங்கிய மற்றவர், இதோ நின்று கிடக்கும் பஸ்ஸில் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். எந்த