பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

சோலை சுந்தரபெருமாள்


கன்னத்திலும் சொல்லிவைத்த அளவாய் வட்டமாய் இரண்டு வெள்ளைத் திட்டுக்கள் மின்னுவதால் எனக்கு சங்கு சக்கரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 'எஸ் எஸ்' என்று சங்கேத பாஷையில குறிப்பிடுவார்கள். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை. அவர்கள் நடத்தையில் வருத்தமேயில்லை. அவைகள் பள்ளிக்கூட நாட்களிலிருந்து எனக்குப் பழகிப்போன சமாசாரம். “எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கும் இதே கம்ப்ளெய்ன்ட் தான். ஆனா நல்ல உத்தியோகம். கை நிறையச் சம்பளம், உசந்த குடும்பம். உனக்கு வேணா பார்க்கட்டுமா?” ஆபீஸில் வயதான ஒருத்தர் என்னைக் கேட்டபோது தான், துக்கம் பீரிட்டு அடித்தது. அவர் காதுக்கு மட்டும் கேட்கும்படியாய், “வேணும்னா உங்க பொண்ணுக்கு அந்தப் பையனைப் பாருங்க சார்,” என்று சொல்ல வைத்தது. என் பதிலில் அடிபட்டு நசுங்கினார். அந்த மனிதரை நினைத்து ராத்திரி முழுக்க வேதனைப்பட்டேன். தலையணை நனைய அழுதேன். எதற்காக அழுதேன் என்று கேள்வி கேட்காமல் தலையைக் கோதியபடி விசும்புகிற அம்மாவையும் கால்மாட்டில் உட்கார்ந்து விசிறின அப்பாவையும் பார்த்து மனசைத் திடப்படுத்திக் கொண்டேன். பேசினால் இவர்களோடுதான் பேசுவது. இந்த இருவரோடு தான் பழகுவது என்று சங்கல்பம் செய்துகொண்டபோது ஒரு மூன்றாவது ஆள் வருகை எனக்கு நேருமென்று நினைக்கவேயில்லை.

“ஹலோ, எம் பேர் பத்ரிநாதன். இந்தக் கம்பெனியில ஸேல்ஸ் எஞ்சினியர். அடிக்கடி டூர் போய்ட்டு வர வேலை. இந்தத் தடவை கொஞ்சம் லாங் டூர். நீங்கதானே புது டெஸ்பாட்ச் கிளார்க்? எனக்கு ஏதாவது லெட்டர் உண்டா? பர்ஸனல் தபால் எனக்குக் கொஞ்சம் இங்கே வரும். இருந்தா தயவுசெய்து கொடுக்கணும். பனாரஸ் அல்வா சாப்பிட்டிருக்கிறீர்களா? பூசணிக்காயில் ஊசி குத்தி சக்கரை இறக்கியிருக்கும். வாயில் போட்டால் தித்திப்பா கரையும். “இந்த மாதிரி டூர் போனா இப்படி ஏதாவது வாங்கிட்டு வருவேன். லைக் டு டேக் சம்?”

என் நினைவு தெரிந்து இதுதான் முதன் முதலாய் இனிப்பில் ஆரம்பித்த சிநேகிதம். என் முகத்தின் கோரம் பற்றிக் கொஞ்சம்கூட சலனப்படாத பாவம். அவர் பெயருக்கு நான்கு கனமான கவர்கள் ஒரு வாரப்பத்திரிகையிலிருந்து வந்திருந்தன. அவற்றை மெல்லிய நூலில் கட்டி ஒரு பெரிய கவரில் போட்டு பசை ஒட்டி வெளியே பெயரெழுதி, கவர் மீது தபால் வந்த தேதிகளை, நேரத்தைக் குறித்து வைத்திருந்தேன்.