பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

247


ரவி கேட்டான்: “இவங்களுக்க வேண்டியவங்க யாரானும் இருக்காங்களா?...ஓ ! நீங்கதானா? கைண்ட்லி டேக் ஹர் ஹோம்... மிஸ் தாமஸ். கிவ் ஹர் ஸம் ஸேடேட்டிவ் இன்ஜெக்ஷன். நாங்க இதுக்கு ட்ரீட் பண்ண முடியாது. நோஃபெஸிலிட்டீஸ்...”

இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னார்: “டாக்டர் ரிப்போர்ட்டைக் கொடுத்திட்டாரு... உங்க டிரைவர், கண்டெக்டர் ரெண்டு பேரோட ஸ்டேட்மெண்ட் வேணும்... சம்பவத்தைப் பார்த்தவரு அந்த அய்யரு... அவரோட ஸ்டேட்மெண்ட்டும் வேணும். எல்லோரும் ஸ்டேஷனுக்குப் போவோம் வாங்க...”

அம்பியின் அத்திம்பேரோடு பேசிக் கொண்டிருந்த பாலு அய்யர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “சரி நானும் வரேன். இவரையும் வேணும்னா கூட்டிண்டு வரேன்.”

வேலு அவரை உற்று நோக்கினான். பாலு அய்யர் அவரையும் சரிக்கட்டி விட்டாரென்று அவனுக்குப் புரிந்தது. அவர் முதலாளியருகே வந்து நின்றார்.

“அந்த அம்மாவை யார் கூட்டிக்கிட்டுப் போவாங்க?” என்று கேட்டான் முதலாளி.

நர்ஸ் கொடுத்த இன்ஜக்ஷனின் காரணமாக அம்பியின் அம்மா மயக்கமுற்றிருந்தாள்.

“ஜானகி, நீ அம்மாவை.” என்று ஆரம்பித்த அம்பியின் அத்திம்பேர் முதலாளியைக் கேட்டார்: “அவ எப்படி அழைச்சிண்டு போக முடியும்? கார் இருக்குதா உங்ககிட்டே?”

இன்ஸ்பெக்டர் சொன்னார்: “நாம் போலீஸ் ஜீப்லே போவோம். இவரோட கார்லே உங்க வொய்ஃபும், அவங்க அம்மாவும் போகட்டும், டிரைவர் அவங்களைக் கொண்டு போய்விட்டுட்டு, ஸ்டேஷனுக்கு வரட்டும்...”

“வேலு, ஐயா சொல்றபடியே செய்” என்றான் முதலாளி. எல்லாரும் வெளியே வந்தார்கள். இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னார்: “டாக்டர் ரிப்போர்ட் தான் சாதகமா இல்லே.”

“நான் யாரு, என்ன செய்ய முடியும்னு சொன்னீர்களா அந்த மடையன்கிட்டே?”

“சொன்னேன், அவன் கேக்க மாட்டேங்கிறான். கத்துக் குட்டி ராஸ்கல்...”

ரவி அப்பொழுது வெளியே வந்தான். “எல்லோரும் இப்படிப் போயிட்டிங்கன்னா யாரு இங்கே இருப்பாங்க, பையனைப் பாத்துக்க!”

“கொஞ்ச நேரம் கழிச்சு என் வொய்ஃப் இங்கே வருவா.” என்றார் அம்பியின் அத்திம்பேர்.

”என்னய்யா டாக்டரே! ரிபோர்ட் இப்படிக் கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டான் முதலாளி.