பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கனிவண்ணன்

ன்னிலம் - மருங்கூரை தாய் மண்ணாகக் கொண்ட கனிவண்ணன் பிறந்த மண்ணில் தன்னோடு வாழ்ந்த வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், மண்ணையுமே முக்கிய களமாக வைத்து நேர்த்திமிகு கலைப்படைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்.

‘...பெரும்பாலும் நேசத்திற்குரிய கிராம மனிதர்களைச் சுற்றி எதார்த்த பாணியில் எளிய நடையில் எந்தச் சிக்கலுமில்லாத கதைப்போக்கில் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பவர் கனிவண்ணன். கிராமம் என்றால் நேசத்திற்குரிய மனிதர்களின் அவலம் மட்டும் தானா? இல்லை. இந்த அவலத்திற்குக் காரணமானவர்களாகிய அரசியல்வாதிகளும், நிலப்பிரபுக்களும் கூட அடையாளம் காட்டப்படுகின்றனர். ஆர்ப்பாட்டம் அதிகமில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்குச் சார்பாக நின்று எதிர்காலம் குறித்த நம்பிக்கைத் தொனியோடு கதைகள் நடத்திச் செல்லப்படுகின்றன. பரிச்சயமான மனிதர்கள் பரிச்சயமான சம்பவங்கள், மனிதர்களையும், சம்பவங்களையும் அறிமுகப்படுத்தும் போதே அடுத்த நிகழ்ச்சி நமக்குத் தெரிந்துவிடுகிறது. எல்லாம் வெளிப்படையாக இருப்பது போன்ற தோற்றம். எதிலும் சிக்கலில்லை. மர்மமில்லை, அப்படியே மர்மமிருந்தாலும் படைப்பாளியின் தத்துவநோக்கு அவற்றைத் தோலுரித்துக் காட்டும் என்பதுதான் எதார்த்த பாணி இலக்கியத்தின் சாதனையாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய எதார்த்த பாணியிலிருந்து எள்ளளவும் வழுவாமல் கதைகளை நடத்திச் சென்றிருக்கிறார் கனிவண்ணன்...’ ஒரு கிராம சபையில்...’ சிறுகதைத் தொகுதிக்கு அ.மார்க்ஸ் மதிப்பீடு செய்யும் போது கனிவண்ணனைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.

மிகச் குறைவாக எழுதினாலும் அவர் படைப்புகள் அடர்த்தியானவை, ஆழமானவை.