பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பற்றி எரிந்து விழுந்த

தென்னைமரம்

ரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு வெகுநேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே அதுதான் தாங்க முடியவில்லை. இந்த கிராமத்தில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவன் போனது கூட ஏதோ கனவில் நேர்ந்தது போல் இருக்கிறதே தவிர நடந்ததாக தோன்றவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மூங்கில் குத்துகள், புளிய மரங்கள், இருபுறமும் வழிந்தோடும் காவிரி. இந்தக் கிராமத்தை அவன் ஏன் தேர்ந்தெடுத்தான்? இந்த மூன்று மணிக்கு விழித்துக் கொண்டு எப்பொழுது விடியும் என்று கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தானா? தினமும் அவன் வருவான் என்று எதிர்பார்ப்பதில் நாள் முழுவதும் கழிந்து விடுகிறது. இரவு ஒரு மணி வரை வழி மேல் விழிவைப்பது அடர்ந்த தூக்கத்திற்கு காரணமாகிவிடுகிறது. ஆனாலும் கத்தியால் குத்தி எழுப்பியது போல விடியற்காலை மூன்று மணி அளவில் அவன் விசாரங்களுக்காகவே திறந்து கொள்கிறது. ஆற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதில் சலிக்கிறதேயில்லை. அவன் வருவானா? என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. இந்த ஆற்றுக்கும், இந்த நீருக்கும் வேறு வேலையே இல்லை என்பது போல.

லோச்சனாவுக்கு அவனை எட்டு வயதிலிருந்தே பழக்கம். எட்டு வயதிலேயே தெரியும். இவனைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறோம், கலியாணம் தள்ளிக் கொண்டே போனது. யாரும் கவலைப்படவில்லை. கவலைப்பட என்ன இருக்கிறது. அவன் அவளை விரும்பி தேடித் தேடி அவளைச் சுற்றி வந்தபோது