பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சைக்கிள்


வீட்டுக்கு எதிரே தெரிந்த கூட்டத்தை பார்த்ததும் ‘பகீர்’ என்றது. கிட்டத்தில் போனதும் தான் எதிர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் என்று தெரிந்தது. ரூபவதியின் கணவர் கத்திக் கொண்டிருந்தார். ‘அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கூறு கூறாகக் கிழித்துப் போடுவேன்’ என்றும் இன்னும் பிரசுரிக்க முடியாத வகையிலும் வசைகள் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.

பக்கத்துத்தெரு சண்முகத்தின் மனைவிதான், ரூபவதியின் கணவனோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் ஒரு பத்து பதினைந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். விட்டால் இரண்டு பேரும்தெருவில் கிடந்து புரளுவார்கள் போல் தெரிந்தது அல்லது சண்டை போடும் ஆர்வம் அணைந்து ஒன்றும் பேசாமல் அவரவர் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போனாலும் போய் விடலாம் சொல்வதற்கில்லை.

கத்திக் கத்தி, இரண்டு பேருக்குமே தொண்டை கட்டிவிட்டது போலும் ரூபவதியின் கணவனுக்கு பெண் குரலும், சண்முகத்தின் மனைவிக்கு ஆண் குரலும் வந்து விட்டிருந்தது. சண்டையை விலக்கி விட்டுக் கொண்டிருந்தவர்கள் சோர்வடைந்து விட்டதனாலோ அல்லது சுவாரசியம் குறைந்து விட்டதனாலோ ஒவ்வொருவராக சண்டைக் களத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்கள்.

ரூபவதி தன் பெயருக்கேற்ற அழகு பொருந்தியவள் என்று சொன்னால். கதைக்காக பொய் சொல்வதாகிவிடும். ஆனால், அதே, சமயத்தில் அவலட்சணமும் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். பெண்களின் சராசரி உயரத்தைவிட சற்று அதிகப்படியான உயரம். ஊடுருவிப் பார்க்கும் பார்வை வசீகரிக்கும் சிரிப்பு. இதில் சண்முகம் எதைக் கண்டு மோகம் கொண்டானோ தெரியவில்லை. ரூபவதியே கதியாகக் கிடந்தான்