பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உத்தம சோழன்


திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள தீவாம்பாள்புரத்தை பிறந்த மண்ணாகக் கொண்டவர் செல்வராஜ். உத்தமசோழன் என்ற புனைப்பெயரை சூடிக்கொண்டு பிரபலமான வணிக இதழ்களில் சிறுகதையாசிரியராக கால் பதித்தவர். அதுபோன்ற இதழ்களில் அறிவிக்கப்படும் சிறுகதைப் போட்டிகளில் பரிசை இலக்காகக் கொண்டு எழுதி பல பரிசுகளை குவித்துக் கொண்டவர்.

கீழத்தஞ்சை மக்களோடு மக்களாய் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஓர் அரசு அதிகாரியும் கூட. அவரின் அனுபவ எல்லை விரிவானது. ஏழை எளிய மக்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை அதிகார மட்டத்தில் இருப்பவருக்கு சொல்லியோ கேட்டோ அறித்து கொள்ளவேண்டிய அவசியமற்றவர். வேளாண் மக்களின் வாழ்க்கையை உள்ளும் புறமுமாய் கலை நயம் படுத்த வேண்டியவர். அவரது சிறுகதைகளில் எல்லாமே மேலோட்டமாய் நின்றே பேசுகின்றன.

நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக்குவித்தவர். சிறுகதையின் கலைவடிவம் உள்ளடக்கம் இவற்றை முன் நிறுத்தி எழுத மூன்வருவாரானால் கலைநுட்பமான சிறுகதைகளை அவரால் தரமுடியும். அதற்கு சாட்சியாக அவரது சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள சில சிறுகதைகள் நிற்கின்றன.