பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதல்கல்


ப்பசி மாத அந்திப் பொழுது, வண்ண ஜாலங்கள் காட்ட வேண்டிய அந்திச் சூரியன் மழைமேகங்களின் சிறையில். அதனால் நிழல் வெளிச்சம் மட்டுமே மிச்சம், பூமிக்கு.

வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்த மருதனுக்கு திக்கென்றது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்த வயல் வெளிகள். அடர்பச்சையில் தீவுபோல ஊர்க்குடியிருப்பு... மரங்களுக்கிடையில், வயல் வெளியெங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான ‘பச்சை’ பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர், வெளிர்பச்சையில் இப்பொழுதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில், நான்கு நாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்க வழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் ‘கெத்... கெத்’ என்று அலையடித்துக் கொண்டிருந்து, ஓட வழி தெரியாமல்.

போதும் பத்தாதற்கு வானொலி வேறு அதிகாலையிலேயே அபாய அறிவிப்பு ஒன்றை வழங்கிவிட்டது.

வங்கக்கடலில் உருவான தாழ்வழுத்த காற்றுமண்டலம் ஒன்று நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்காக நகரக் கூடும். இதன் விளைவாக அடுத்த நாற்பத்தியெட்டு மணி நேரத்திற்கும் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த அல்லது மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், கீழத்தஞ்சை மாவட்டக்காரர்களுக்கு இது வாடிக்கையான செய்திதான். ஆனால்...

கர்நாடகத்தின் ஒற்றுமையான பிடிவாதத்தால், காவிரியின் கடைமடைக்காரர்கள். ‘குருவை’யை மறந்து விட்டு, ‘சம்பா’விற்காவது தண்ணீர் வராமலா போய்விடும் என்று நாற்றை விட்டு, அது முற்றுகின்ற வரை ‘மேட்டூர்’ நிலவரத்தை அன்றாடம்