பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆத்திரம்


மேற்கு வானில் செம்மஞ்சள் பரவிக் கிடந்தது. கதிர் அடக்கிய சூரியனைக் காணவில்லை. வடக்கு நோக்கி காக்கைகளும், மைனாக்களும் கத்திக் கொண்டு பறந்தன. குளத்துக் கரையில் வழக்கமாய் மேயும் ஆடு, மாடுகள் ஆத்து வாய்க்கால் வழியே சென்று விட்டிருந்தன. மயான அமைதியைக் கலைத்தபடி ஆரவாரமாய் மீசைக்காரர் கள்ளரின் பிண ஊர்வலம் நெருங்கியது.

செவந்தானும் பொன்னுச்சாமியும் பூவரசங்கட்டைகளை பக்குவமாக அடுக்கி, தலைப்பக்கமும் கால் பக்கமும் கட்டைகள் சரிந்து விடாமல் பக்கத்துக்கு இரண்டு அச்சுகளை அடித்து வைத்தனர். கை எட்டும் அளவில் விராட்டிகளை கொட்டி வைத்தனர். ‘கண்ணு’ புடிச்ச வைக்கோல் அருகில் கிடந்தது. பிணத்தை மூடி மண் வைத்துப் பூச மோட்டார் கிணத்தில் தண்ணீர் எடுத்து வந்து மண்ணைக் குழைத்து வைத்திருந்தனர். அரிவாள், கோடரி, மண்வெட்டி இவற்றுடன் பட்டைப் பூண் போட்ட வைரம் பாய்ந்த மூங்கில் தடியும் கிடந்தது.

மூங்கில் தடி இல்லாமல் செவந்தான் எங்கும் : கிளம்புவதில்லை. வயதான காலத்தில் கைத்தடி வேண்டும் என்றாலும்... செவந்தான். தடியூன்றி நடப்பதில்லை . எந்நேரமும் கம்கட்டில் வைத்திருப்பார். படுக்கிற நேரத்தில் தடியை எங்கும் சாத்தி வைக்காமல் தன் படுக்கையிலேயே போட்டுப் படுப்பார்.

செவத்தான்... உள் வல்சலான ஆள். நாலு முழ வேட்டியை முழங்காலுக்குக் கீழே இறங்கி விட்டுக் கட்டியிருப்பார். மடியில் நாலைந்து அறைகளைக் கொண்ட மடிச்சிலப் பையை நீண்ட கயிற்றைப் போட்டுச் சுழற்றிக் கட்டி வைத்திருப்பார். பையில் ஏதும் இருக்கிறதோ இல்லையோ மடி மட்டும் எப்போதும் கனமாகவே இருக்கும். ஏலத்தில் எடுத்த பச்சைத் துப்பட்டியை தலையில் முண்டாக கட்டியிருப்பார். எத்போதாவது தான் முண்டாசை அவிழ்ப்பார்.