பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

337


பொன்னுசாமி, ரெங்கசாமி இவர்களெல்லாம் செவந்தான் சொன்னபடி கேட்டனர். செவந்தான் பிணம் கூட முன்னாயத்த வேலையைச் செய்தார். தயாராயிருந்த விறகு அடுக்கில் பிணத்தைத் தூக்கி வைத்தார்கள். விராட்டியை வைத்து அடுக்கி மார்புப் பகுதியில் விராட்டியுடன் உடைந்த ஓடுகளையும் வைத்து அடுக்கினார். பின்னிக் கிடந்த வைக்கோலை விராட்டி மேல் பரப்பி குழைத்த மண்ணை வைத்துப் பூசினார். நீளவாக்கில் விரலால் நான்கைந்து துளைகளைப் போட்டு அவற்றில் சீனி, குங்கிலியம், சீயக்காய்... என உள்ளே கொட்டினார். கொள்ளி வைக்கத் தயார் செய்துவிட்டு, ம். அடுத்த காரியத்தைப் பாருங்க... என்றார்.

உறவு முறைக்காரர்கள் வாய்க்கரிசி போட்டு முடித்தனர். மூட்டி வைத்திருந்த நெருப்புச் சட்டியிலிருந்து சிறு சந்தனக் குச்சியை எடுத்து கொள்ளிக்காரர் கொள்ளி வைத்த கையோடு எல்லோரும் கலைந்து சென்றனர். உடனே, சுற்றி வைத்திருந்த வைக்கோல் பிரியை பற்ற வைத்து சுற்றிலும் நெருப்பு வைத்தார் செவந்தான் எரிய ஆரம்பித்தது.

சுடுகாட்டிலிருந்த மேட்டில் எல்லோரும் கூடினர். வண்ணார் விரித்த மாத்தில் முக்கியமான ஒரு சிலர் உட்கார்ந்தனர். கருமாதி வைக்க தேதி குறித்த பின்னர் காலையிலிருந்து வேலை செய்த ஆட்களுக்கு கூலி கொடுத்தனர். தப்புக்காரர்கள், வண்ணார், பாடை கட்டியவர்கள், கேதம் சொல்லிப் போனவர்கள், மரம் வெட்டியவர்கள், விராட்டி வாங்கப் போனவர்கள் வெடிவிட்டவர் என்று எல்லோரையும் அழைத்த ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுத்தனர். அதைப்போலவே "பொணஞ் சுடுறது யார்டா”, என்ற அழைப்புக்கு.

தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து கம்கட்டில் வைத்தபடி... “சாமி... நான்தாங்க... கூட பொன்னுச்சாமியையும், ரெங்கசாமியும் நிக்கிறான்ங்க. பாத்துக் குடுங்க சாமியோவ்” என்று கும்பிட்டபடி சொன்னார் செவந்தான்.

“என்னத்தெடா பாத்துக் குடுக்கிறது. சின்னக் கள்ளுச்சியெ எரிச்சியலெ அரை கொறையா.. அப்படியில்லாமெ இருக்கணும் இம்புட்டு வேணுங்க சாமின்னு கேளுடா. செவந்தான் மிச்சம் புடிக்கவா கேக்கிறே எல்லாம் தண்ணிக்கித் தானெடா”. மரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் சொன்னர்.

“என்ன சாமி. ஓங்களுக்கு தெரியாதா, தண்ணிய கிளாசி - அஞ்சி ரூவா விக்கிதுங்க. அதுவும் மொட்டப் பச்சத் தண்ணி-- நாங்க மூணுபேரு...... வழக்கமா குடுக்கறதெ விட கூட. பாத்துக்குடுங்க மீசைக்காரக் கள்ளனுக்கு காசே வாங்காம எரிக்கணும்... நாங்க அப்பிடிக் கூட்டாளிக...” செவந்தான் பணிவாகக் கேட்டார்.