பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

45


ஊற்றிச் சாப்பிட்டு விடுங்கள். நாளைக்கு நன்றாக நீங்களே சமைத்துக் கொள்ளலாம்” என்றாள்.

“நீ சொன்னதில் எனக்கு வருத்தமில்லை, கோபமுமில்லை; ஆனால் சாத்தியப்படாத சங்கதி. நான் அந்தணன். உன்னைப் போல உத்தமப் பெண் சமைத்துச் சாப்பிடுவதை என் மனம் ஏற்றாலும், ஊரார் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் திட்டுவார்கள். என்னை ஊரைவிட்டுத் துரத்தி விடுவார்கள். வயிற்றுப் பிழைப்பு தேடிவந்த என் கதி என்னவாகும்? என்னை நம்பிக்கொண்டிருக்கிற என் குடும்பத்தின் கதி என்னவாகும்? நீ புத்திசாலி எனத் தோன்றுகிறது. நினைத்துப் பார்” என்றான் வாத்தி.

“சுவாமி! சுவரை வைத்துத் தானே சித்திரம் எழுதவேண்டும்? நீங்கள் பட்டினி கிடந்து இறந்து போனால், உங்கள் கதி என்னவாகும்? உங்கள் குடும்பத்தின் கதி என்னவாகும்? நினைத்துப் பாருங்கள்” என்றாள் பெண்.

“நீ சொல்லுவது சரிதான். நான் ஒப்புக்கொள்ளுகிறேன். நீ சமைத்து நான் சாப்பிட்டேன் என்பதை என் தகப்பனார், தாயார் கேள்விப்பட்டால், அவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு, பிராணனை விட்டு விடுவார்கள். என் தேகம் அவர்கள் எனக்குக் கொடுத்த தேகமாகும் ஒரு வழி சொல்லுகிறேன் கேள்; நீ சொன்னபடி கொண்டு வா. நீ இங்கேயே உட்கார்ந்து கொண்டு நீ எனக்குச் சமைக்கும் வித்தையைச் சொல்லிக் கொடு. நான் சமைக்கிறேன். அவ்வளவு தான். வைதீகத்தை, ஜாதியை முறிக்காமல், என்னால் செய்ய முடிந்தது” என்றான் நாராயண சர்மா.

பேச்சை வளர்க்க மனமில்லாமல், வீரம்மாள் வீட்டிலிருந்து சாமான்களைக் கொண்டு வந்தாள். சமையல் அறையை ஒருவாறு சுத்தம் செய்து, அடுப்புமூட்டி உலையை வைத்தான் சர்மா. அடுப்பை எரியவிடுகிற ரகசியம் அவனுக்குத் தெரியவில்லை. அடுப்பு முழுவதும் ஒரே புகைமூட்டமாக இருந்தது. இதனிடையே, துடைப்பத்தைக் கையிலெடுத்து, ஒரு வினாடியில், பள்ளி முழுமையையும் வீரம்மாள் சுத்தமாகக் கூட்டி, குப்பையை வெளியே கொண்டுபோய் எரிந்துவிட்டாள். வீரம்மாள் என்ன சொல்லிக்கொடுத்தும், பதம் பார்த்து வடிக்கும் வழக்கம் தெரியாமல், சோற்றைக் களியாக்கிவிட்டான் சர்மா. அந்தக் களியிலே மேரை ஊற்றிச் சாப்பிட்டு, அன்றிரவைப் போக்கினான். பசியிலே அந்தக் களியும் அமுதமாய் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா? ஏழைக்கு ஒரு நாள் ஒரு வருஷமாகக் கழியும். பொருள் உள்ளவனுக்கு வருஷம், நிமிஷத்தில் பறந்துபோகும்.

மறுநாள் காலையில் குயவனிடம் கடனாக, சமையலுக்கு