பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடரங்கு

கூட்டம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஏதோ பொறுக்கி எடுத்த சிலருக்கு, உபயோகப்படக் கூடியவர்களுக்கு, கலை உலகிலே முக்கியஸ்தர்களுக்கு மட்டுந்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. பத்துப் பதினைந்து பெண்மணிகள், ஏழெட்டுக் குழந்தைகள், இருபது ஆண்கள்-இவ்வளவுதான். பெண்களில் சிலரையும், குழந்தைகளையும் தவிர மற்றவர்களெல்லாம் கலை உலகில் பெரிய ஸ்தானம் வகிப்பவர்கள்; அந்தச் சில பெண்களும் குழந்தைகளுங்கூடப் பெரியவர்களின் வீட்டுக் குழந்தைகளும், பெண்களுந்தான். லஷ்மி பாக்கியசாலி. அவளுடைய அரங்கேற்றம் நல்ல சுபசூசகங்களுடன் கலைத்தூண்’களின் நிழலில் நடக்க இருந்தது.

லக்ஷ்மி உள்ளே வரும்போதே, “கீழே விரித்திருக்கும் விரிப்பு வழுக்காதே?” என்று சபையில் யாரோ கேட்டதும், “வழுக்காது; அநேகமாக வழுக்காது” என்று யாரோ சொன்னதும் அவள் காதில் விழுந்தன. குனிந்து பார்த்தாள். ரப்பரைப்போல ஏதோ ஒரு விரிப்பானது கீழே விரிக்கப்பட்டிருந்தது. அது அறை அகலம் முழுவதுங்கூட இல்லை. நடு அறையில் நாலடி அகலத்துக்குத்தான் இருந்தது. முழுவதும் அந்த விரிப்பிலேயே நாட்டியம் ஆடிவிட முடியாது. தரையிலும் கால் படத்தான் படும். விரிப்பு வழுக்காது போலத்தான் இருந்தது. ஆனால் காலைத் தரையிலிருந்து விரிப்புக்கு மாற்றும் போது அதிக ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும். தடுக்கிவிட்டால் ஆபத்து... ஆமாம், ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்! அதென்ன, நாட்டிய மேடையா, எல்லாச் செளகரியங்களும் இருக்க? சாதாரண வீட்டில் ஒரு கூடம்; இந்தச் சந்தர்ப்பத்துக்கு நாட்டிய அரங்காக, லக்ஷ்மியின் அரங்கேற்றத்துக்காக மாறியிருந்தது; அவ்வளவுதானே! எவ்வளவு அசெளகரியமிருந்தாலும் கூட்டம் அதிகம் இல்லாதது பற்றி லக்ஷ்மிக்குப் பரம திருப்தி. என்ன இருந்தாலும் அவள் சிறுமிதானே? தைரியம் கொஞ்சம் இருந்தது; வாஸ்தவந்தான். இன்று இங்கே சபையில் கூடியிருந்தவர்கள் பெரியவர்கள் கலையைப் பற்றி முற்றும் அறிந்தவர்கள்; வயதானவர்கள்; தன் நாட்டியத்தில் எவ்வளவு குற்றம் குறையிருந்தாலும் சரியாகப்