பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சோலை சுந்தரபெருமாள்


பயிற்சி பெறாதவள், சிறுமி என்பதற்காகத் தன்னை மன்னித்துவிடக் கூடியவர்கள் என்று எண்ணினாள் லக்ஷ்மி. அது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

எதிரே சுவரில் பெரிய சரஸ்வதி படம் ஒன்று மாட்டியிருந்தது. அதை நோக்கிக் கையைக் கூப்பி வணங்கினாள் லக்ஷ்மி. அப்புறம் மெல்லெனச் சதங்கை ஒலிக்க, இரண்டடி முன்னால் எடுத்துவைத்துச் சபையை நோக்கித் தாழ்ந்து கைகூப்பி வணங்கினாள். அதே வினாடி மத்தளம் முழங்கிற்று. ‘வயலின்’ இசைத்தது. நட்டுவனாரும் கலந்து பாட ஆரம்பித்துவிட்டார். நாட்டியத்தை ஆரம்பிக்க, லஷ்மியின் கையும், காலும் துடித்தன. சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் தாய்மட்டும் ஏன் முகத்தை அப்படிச் சிணுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்? ‘எதையாவது மறந்துவிட்டேனோ?’ என்று எண்ணினாள் லஷ்மி. சதங்கை, கச்சை, டோலக்கு, பொட்டு, தலையணி எல்லாம் சரியாகத்தானே இருந்தன? இதென்ன இப்படி ஆரம்பிக்கும் போதே தடங்கலாகச் சகுனம்? அவள் தாய் ஏதோ சைகை காட்டினாள்... என்ன? என்ன அது? மறுபடியும் வணங்கச் சொன்னாள். யாரை? லக்ஷ்மி சபையைப் பார்த்தாள். ஓ!

லக்ஷ்மி சதங்கை ஒலிக்க லாகவமாக நடந்து போய்ச் சபையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மிஸ் ஊர்வசியை வணங்கினாள். என்ன பைத்தியக்காரத்தனம்! அவள் தாய் எவ்வளவோ தரம் சொல்லியிருந்தும் ஏன் இது இப்படிக் கடைசி விநாடியில் மறந்துவிட்டது! அசட்டுத்தனம்! அவள் தாய் படித்துப் படித்துச் சொன்னாளே! கடைசி நிமிஷத்தில்... நல்ல வேளை, கடைசி நிமிஷத்திலாவது ஞாபகம் வந்ததே! அந்தமட்டும் சரிதான். மிஸ் ஊர்வசி எவ்வளவு அபூர்வமான, வசீகரமான பாவத்துடன் அவளுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டாள்? அவளுடைய முகத்திலும், கையிலும் சட்டென்று ஒரு விநாடியில் தோன்றி மறைந்த அசைவுதான் எவ்வளவு அதிசயமானது! உண்மையிலேயே மிஸ் ஊர்வசியை நாட்டியக் கலையின் சிகரத்தை அடைந்தவள் என்று சொல்லுவதில் தவறில்லை என்பது அந்த ஓர் அசைவிலேயே லக்ஷ்மிக்குத் தெரிந்துவிட்டதுபோல் இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே லக்ஷ்மி மெதுவாகத் தன்னுடைய ஆரம்ப ஸ்தானத்துக்கு நகர்ந்தாள். மிஸ் ஊர்வசியைப் போலத் தானும் ஆகிவிட வேண்டுமென்று அவள் உள்ளத்திலே தோன்றிற்று. இன்று ஆரம்பம், முன்னோக்கி நாட்டியமாடி நகர.

இதோ நாட்டியம் ஆரம்பித்துவிட்டது. முதலில் மூன்று பாட்டுக்களுக்கு அபிநயம் பிடிப்பது ரொம்பக் கஷ்டமான காரியம். லக்ஷ்மியின் மனம் அபிநயத்தைத் தவிர வேறு எதிலும் ஓடவில்லை. வரிசைக் கிராமமாகப் பாட்டனார் சொல்லித்