பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தஞ்சை மராட்டிய


யுற்றார் வருந்தினார் உறங்கும்பொழுது துளசிபவானி கனவில் தோன்றிக் கூறியவண்ணம், திரியம்பக பாஸ்கர் என்பவரைப் பனாலாவில் வைத்துவிட்டு, இரவில் புறப்பட்டு ஐந்து காதவழிக் கப்பாலிலுள்ள விசால்கட் கோட்டையை அடைந்தார். ஷயிஸ்டகான் இதனையறிந்து மஹசூத் என்பவரைச் சிவாஜியைப் பிடித்து வருமாறு ஏவினார். இதற்குள் பல்லிவனத் தரசர் எசவந்த ராஜா சிருங்கார்பூர் சூரியராஜா ஆகியோர் விசால்கட்கோட்டையை முற்றுகையிட்டுத் தோற்றனர். பின்னர்ச் சிவாஜி அங்கிருந்து புறப்பட்டு ராஜகெடிக்கு வந்து தன் தாயார்க்கு வணக்கம் செலுத்தினார். மஹசூதும் மானமிழந்து திரும்பி சென்றார்.

சிவாஜியின் ஆட்டளைப்படி திரியம்பக பாஸ்கர் பனாலகெடியை ஜோஹர் கானுக்கு ஒப்படைத்துப் பல பரிசுகளும் பெற்றுச் சிவாஜியிடம் வந்தார். ஜோஹர்கான் சிவாஜியிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு சிவாஜியை விட்டு விட்டார் என்று அல்லியெதில்ஷா கருதி, அத்தொகையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பணித்தார். ஜோஹர்கான் வருந்தித் தன் சேனையுடன் கர்னூலுக்குச் சென்றார். இதையறிந்த யேதில்ஷா ஒரு படையை அனுப்பினார். அப்படைஞர் ஜோஹர்கானுக்கு நஞ்சு கொடுத்துக் கொன்று விட்டனர்.

சிவாஜி பின்னர்த் தன் அமைச்சருடன் கலந்து கொண்டு, ஷயிஸ்டகான் கரதலப்கான் என்பவருடனே சிறிது படைகளுடன் ராஜகெடியிலே வந்திருப் பதை அறிந்து, சிறிது படைகளை ஜெயவலிப் பகுதியில் காட்டிலே பதுங்க வைத்துக் கொண்டிருந்தார். கரதலப்கான் பல சர்தார்களுடன் வந்து பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு சிவாஜியிருக்கும் காட்டுக்குள் நுழைந்தார், பெரும் போர் நடந்தது. தான் அழிவது உறுதியென்று நினைத்த கரதலப்கான். இராசா வியாக்கிரி என்பவருடைய துண்டுதலின் பேரில், சமாதானம் செய்து கொண்டு, எல்லாப் பொருள்களையும் கொடுத்துவிட்டு ஷயிஸ்டகானிடம் போய்ச் சேர்ந்தார்.

சிவாஜி, நேதாஜியுடன் பல்லிவனத்துக்குச் சென்றார். அதன் அரசர் ஜெயவந்தி ராஜா ஆவர். அவர் சிருங்கார்ப்பூர் அரசர் சூர்யாராஜாவிடம் போயிருந்தார். அவர்களை மன்னித்துச் சிவாஜி சித்ரபுளினத்துச் சென்றார்: அங்குள்ள பரசுராமர் கோயிலுக்குச் சென்று வணங்கினார்; பிறகு சங்கமேசுவரத்தில் இருந்த சூரியராவ் என்பவரைத் தனக்கு ஆதரவாக இருக்கச் செய்து, மேற்குக் கடற்கரையோரத்தில் வாணிகத்தின் பொருட்டு வந்திருந்த வெள்ளைக்காரர் முதலாகிய எல்லாரையும் தனக்கு அடங்குமாறு செய்து கொண்டு, அவர்கள் அளித்த பலப்பல பொருள்களை ஏற்றுக்கொண்டு, எல்லாநாடுகளையும் தனக்குரியதாக்கிக் கொண்டு, ராஜபுரத்திலிருந்தார்.

அல்லியேதில்ஷா, பிரபாவளியின் அரசராகிய சூரியராவுக்கு எழுதியதின் பேரில், அவர் சங்கமேசுவரத்தை இரவில் தாக்கினார். ஆனால் மல்லிசூர் என்கிறவர் சூரியராஜாவைத் துறத்திவிட்டார். சிவாஜி சங்கமேசுவரத்துக்கு வந்தார்; சூரியராஜாவை மன்னித்தார்; தன் பக்கம் இருக்குமாறு பணித்துத் தன்னிடம்