பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தஞ்சை மராட்டிய


இருவரும் தமக்கு உதவியாக ஏகோஜியையும் அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று வேண்ட அதற்கு ஏதில்ஷா இசைவளித்தார். ஏகோஜியும் அதற்கு இசைந்து பெரும்படையோடு வந்தார்; வழியில் ஆரணியை வென்று, வேதாஜி பாஸ்கர் என்பவரை அங்கிருக்கச் செய்து, தஞ்சைக்கு வந்து, திருச்சியாரைத்துறத்திப் பெங்களுர்க்குப் புறப்பட்டவர், திருமழபாடியில் தங்கினார். அப்பொழுது சகம் 1596இல் தீபாபாய் இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தார். அவர் மூன்றாவது சரபோஜி ராஜா எனப்பட்டார். தஞ்சாவூரிலே ஒருவருக்கொருவர் கலாம் விளைவித்துக் கொண்டு ஏகோஜியிடம் வந்து தஞ்சாவூர் அரசை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். ஏகோஜியும் தஞ்சாவூர்க் கோட்டைக்கு வந்தார்.

8 சிவாஜிக்கு எட்டு மனைவியர் இருந்தனர்; அவர்கள் சயிபாயி, காசி பாயி, சக்வராபாயி, புதுளாபாயி, சகுனாபாயி, சோயரிபாயி, மாளவோ, விசாரே குலத்துப் பெண்கள் ஆக எண்மர்.

மூத்தாள் சயிபாயிக்கு மூன்று பெண்களும் ஒரு ஆணும் பிறந்தனர். ஆண் மகன் சம்பாஜி, சகம் 1596இல் பிறந்தார். சிவாஜி முதற்பெண் சக்வார்பாயியை நிம்பால்கர் வீட்டிலேயும், இரண்டாவது பெண் ராணாபாயியை ஜாதவ் வீட்டிலேயும், மூன்றாமவள் அம்பிகாபாயியை மாடிக்கு வீட்டிலேயும் கொடுத்தார்; ஷாஜி மாடிக்குக்குச் செஞ்சிப் பகுதியில் சிறிது ஜாகீரும் கொடுத்தார்.

சக்வராபாயிக்குக் கமலாபாயி என்றொரு பெண். அவளைச் சிவாஜி நேதோஜிக்குக் கொடுத்தார்.

சகுனாபாயிக்கு ராஜகுமாராபாயி என்றொரு மகள். அவள் கேனோஜிசிற்கே என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.

சோயரிபாயிக்கு ராமராஜா என்ற மகனும், தாதுபாயி என்ற பெண்ணும் பிறந்தனர். எஞ்சியோர்க்கு மக்கள் பிறக்கவில்லை.

மூத்த மகன் சம்பாஜிக்குச் சகம் 1602இல் பட்டம் கட்டிப் புனா பகுதியும், இளைய மகன் ராஜா ராமுக்குச் செஞ்சி அரசும் கொடுக்கப் பெற்றன.

புனா முகமதியர்க்கு உரியதாயிற்று. ராஜா ராமும் செஞ்சியை விட்டுத் தஞ்சைக்குச் சென்று சின்னாள் பின்னர்ச் சிவாஜியிடம் சென்றடைந்தார். ராஜா ராமுக்குப் பனாலகெடி கொடுக்கப்பட்டது.

சிவாஜி சேதுயாத்திரையில் ஒருவருக்கும் தெரியாமல் வந்து போனார். ஏகோஜி ஆண்ட காலத்தில் தஞ்சாவூர்க் கோட்டைக்கு வந்து, கோட்டையைச் சுற்றிப் பார்த்துத் தன் கருத்தை எழுதி அனுப்பினார். தான் வந்த பொழுது சிகா மோதிரம் ஒரு கடையில் அடகு வைத்ததாகவும், அதை வாங்கியனுப்பு மாறும் எழுதியிருந்தார். பின்னர் இந்த உலக வாழ்வை நீத்தார்.