பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நேரடியாகப் போட்டியிட்டது முதல்முறையாக! தேர்தலில் போட்டியிட்ட ஆர்.கே. சண்முகம், ஏ. இராமசாமி போன்ற பிரமுகர்கள், நீதிக் கட்சிக்குத் தோல்வியையே பெற்றுத் தந்தனர். காங்கிரஸ் கணிசமான வெற்றிகள் பெற்றது.

இந்தத் தோல்வியால் துவண்டுபோன நீதிக் கட்சியினர்க்கும், சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கும், புத்துணர்ச்சியும் உத்வேகமும் புகுத்தித், தென்பினைப் பாய்ச்சி அன்பினைச் சொரிந்த பெரியார், எதிர்காலத்தில் தமது திட்டங்களைச் செயல்படுத்திட நீதிக்கட்சியையே கருவியாகப் பயன்படுத்தப் போவதாகவும், அதுதான் வெற்றியளிக்குமென்றும் திடமாக நம்பிக்கை தெரிவித்து வந்தார். உண்மைதானே?

ஈரோட்டில் குடியரசுப் பதிப்பகம் நிறைய நூல்களை வெளியிட்டு வந்தது. சாத்தான்குளம் இராகவன் வந்து பெரியாருக்கு உதவியாயிருந்தார்; மேலும் புத்தகங்கள் வெளியாக்கப் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகமும் நிறுவப்பட்டிருந்தது. இதன் வாயிலாகவும் எண்ணற்ற, பயனுள்ள நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. மிகக் குறைவான, அடக்க விலையில், பெரியார் நூல்களை வெளியிட்டு வந்தார். இந்த இரண்டு நூல் வெளியீட்டு அமைப்புகளின் சார்பிலும் பெரியார் எழுதிய கர்ப்ப ஆட்சி, புராண ஆபாசம், பார்ப்பனக் கொடுமை, பெரியாரின் பல உபந்யாசங்கள் (சொற்பொழிவுகள்), சோஷலிசம், சோதிடப்புரட்டு, பொதுவுடைமைத் தத்துவம், பெண்ணடிமை, பிரகிருதிவாதம், மதம் என்றால் என்ன; மற்றவர் எழுதிய ஞானசூரியன், இராமாயணப் பாத்திரங்கள், பாரத ஆபாசம் என்பன போன்ற தலைப்புகளில் வெளியான கணக்கில்லாப் புத்தகங்கள் நன்றாக விற்பனை ஆயின. பெரியார் சுற்றுப்பயணம் செல்கின்ற நேரங்களில் பிரம்பு, கைப்பெட்டி, படுக்கை (ஹோல்டால்) இவற்றோடு இரண்டு மூன்று சிப்பங்கள் இப்புத்தகங்களையும் சுமந்து ரயிலுக்குச் செல்வார். ஆங்காங்கு கூட்டங்களிலும், மாநாடுகளிலும் உரையாற்றுகையில், இடையிடையே இந்தப்புத்தகங்களின் சிறப்புகளையும் கருத்துகளையும் பற்றி விவரித்து, விலை சகாயத்தையும் எடுத்துக்காட்டி விளம்பரம் செய்து, நூல்களை விற்பனை செய்வார். இறுதி நாள்வரை இந்த வழக்கம் பெரியாரிடம் தொடர்ந்தது!

இந்தப் பதிப்பகங்கள் இரண்டும் அரசாங்கத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. பல புத்தகங்களை அரசு பறிமுதல் செய்தது. சிலவற்றைத் தடைசெய்தது. “குடி அரசு” இதழ்மீது 1933-ல் வழக்குத் தொடுத்துப், பெரியாருக்கு 9 மாதம் சிறைத்தண்டனை; 300 ரூபாய் அபராதம்; செலுத்தத் தவறினால் 1 மாத சிறை. தங்கை கண்ணம்மாளுக்கு 6 மாத சிறைத் தண்டனை; 100 ரூபாய் அபராம்; செலுத்தத் தவறினால் 1 மாத சிறை; அதே போன்று 1935-ல்