பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

130


பத்திரிகைக்கு மீண்டும் ஜாமீன் கேட்கப்பட்டது. நான் ஏன் நாஸ்திகன் ஆனேன் என்ற புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது புரட்சி வீரர் பகத்சிங் அவர்களால் தமது தந்தைக்குக் கடிதமாக எழுதப்பட்டுத், தோழர் ப. ஜீவானந்தம் தமிழில் மொழிபெயர்த்தது. இதனை எழுதியதற்காக ஜீவாவும், உண்மை விளக்கம் அச்சகத்தில் பதிப்பித்ததற்காக ஈ. வெ. கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு காலகட்டத்தில் பெரியார், அரசுக்குத் தம்மீதும் இயக்கத்தின் மீதும் தப்பபிப்பிராயம் ஏற்பட்டதை அறிந்து, அதனைப் போக்க, ஒரு ராஜி பேச நேரிட்டது. இது கேவலமல்ல என்ற எண்ணந்தான் பெரியாருக்கு. அதற்கு ஆதரவாகப் பெரியார் என்ன எழுதினார்:- “உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும், காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தை - முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும், இந்தியன் பினல் கோட் 122-A செக்ஷன்படி, இராஜத்துவேஷக் குற்றம் சாட்டிக், கைதியாக்கிச் சிறையில் வைத்து. வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்திருந்ததாகும்! அவ்வழக்கு, மேற்கண்ட இருதோழர்களாலும் இராஜத்துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரச்சாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கப்படவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து, இராஜத்துவேஷம் என்று கருதத் தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டுவிட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன்பேரில் - அரசாங்கத்தார் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு ஈ.வெ.கி., ப.ஜீ., ஆகியவர்களை விடுதலை செய்து விட்டார்கள்.

இந்தப்படி இந்த இரண்டு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்லர் என்பதையும், பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த மன்னிப்பு எழுதிக் கொடுக்கப்பட்டதும், அதைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டதும், ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சர்க்கார் மனத்தில் எப்படியோ தப்பபிப்பிராயம் ஏற்பட்டு, எப்படியாவது அடக்கி அழித்துவிடவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக, நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்!

நம் சுயமரியாதை இயக்கம் சமூகத் துறையிலுள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும்,