பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சர்க்கார் அதிகாரிகள் முதல் அநேக செல்வவான்களும் நமது இயக்கத்தில் கலந்து வேலைசெய்து வந்ததும் எவரும் அறியாததல்ல! ஆனால், சிறிது காலம் சென்றபின், மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். என்றாலும், அரசாங்கத்தார் தப்பபிப்பிராயத்தைக் கொண்டு, இயக்கத்தை அடக்க அடக்குமுறைப் பிரயோகம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்கிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டதால், எனக்கு ரஷ்யாவோடு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அதிகாரிகளிடம் விளக்க வேண்டி வந்தது.

அதனால் ஓரளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திகொள்ளலாம் என்கின்ற ஆசையின்மீதே, பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபனை இல்லை என்றும், சாதி, மத சம்பந்தமான விஷயங்களில் வேறு சாதிக்காரர்கள் மனம் புண்படும்படியோ, அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல், சாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம், சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும், மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில், மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால், நான் இந்தச் சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே, இதன் பலன் என்னவானாலும், இதற்குநானே பொறுப்பாளி என்றுதான் சொல்லவேண்டும்.

சில இளைஞர்களுக்கு இது கேவலமானதாகத் தோன்றலாம். என்றாலும், நம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ, திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை, சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் அல்லவா!

ஊரார் என்ன சொல்லுவார்கள், எதிரிகள் என்ன சொல்லுவார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து அதற்கு அடிமையாகி, மாற்றங்கள் செய்வதானால் மாத்திரம், அவற்றுக்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருதமுடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில், எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்!” (குடி அரசு 31.3.1935)

அடிக்கடி அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேரிட்டதால், அவ்வப்போது பல பத்திரிகைகளை மாற்றி மாற்றிப் பெரியார் நடத்தி வந்தார். 1933-ல் “புரட்சி” வார இதழ், 1934-ல் “பகுத்தறிவு” வார