பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

140


அலி சகோதரர்கள் ஈரோடு வந்திருந்தபோது, தமது அன்னையாருடைய கரங்களின் மீது தங்கள் சிரங்களைப் படியவைத்து, அப்பேர்ப்பட்ட வீர இராமசாமிப் பெரியாரின் அன்னை, தங்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டபோது, அவர்களெதிரில் அவ்வாறே வாழ்த்திவிட்டுப், பின் உள்ளே சென்று, தீட்டுப்பட்டதற்காகத் தலை முழுகிய செய்தியினைப் பெரியார் நயமாக வெளியிட்டுள்ள பாங்கு, எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும். பெற்ற மகனையே தொட நேரிட்டாலும், குளித்து முழுக ஓடும் ஆச்சார சீலராயிற்றே அந்தப் பெருமாட்டி! ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை அடைந்துவிட்ட சிலர், தமது முன்னாள் ஏழ்மை வாழ்க்கையினைத் திரும்பிப் பார்ப்பதில்லை! இன்றுள்ளோர் யாருக்கும் உண்மை தெரியாது என்ற துணிவில், தாம் அரசபரம்பரை எனக் கூசாது பொய் மொழிவதுதான் வாடிக்கை. இங்ஙனமிருக்கப், பெரியார் தமது பெற்றோரின் ஏழ்மைக் கூலி வாழ்க்கையினை, எட்டுணையும் மறைக்காமல் கூறியுள்ள வாய்மையினை எவ்வாறு பாராட்டுவதோ?

இதனால்தான், பெரியாரது தொண்டின் பெருமையினை நேரிற் கண்ட பெரியோர்கள் அக்காலத்திலேயே அவரைப் பலபடப் புகழ்ந்துள்ளனர்:- இவர் இயற்கைப் பெரியார்; இவரது கருத்துகளும், அரிய யோசனைகளும் இயற்கையறிவில் உதித்தவை; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்பது பெரியாருக்கே பொருந்தும் - என்றார் திரு.வி.க. தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி இவர்தான்; பெரியாரிடம் உள்ள விசேஷ உத்தம குணம் தன் மனத்திற் பட்டதை ஒளிக்காமல் சொல்வதுதான்; அவரைப் பற்றி அய்ரோப்பாவிலும் பேசப்படுகிறது - என்றார் வ.உ.சி. தமக்கு நியாயமென்று பட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் பெரியார் முதல் இடம் பெற்றவர்; சமய சமூக அரசியல் துறைகளில் அவர் செய்துள்ள தியாகமும் ஊழியமும், பட்டுள்ள கஷ்டங்களும் இத் தேசத்தினர் ஒரு நாளும் மறக்க முடியாது - என்றார் டாக்டர் நாயுடு. பொதுநலம் பேணும் அறம் திறம்பா அருண் மறவர் பெரியார்; கலா நிலையக் கல்விப் பட்டங்கள் பெறாமல், மானமிழந்து பிறர் பின் நின்று பதவி முதலிய வீண் பெருமை தேட விரும்பாமல் ஊக்கமும் வாய்மையும் ஆக்கமனைத்தும் தரும் என்பதை நாள்தோறும் தாம் வாழ்ந்து காட்டும் சால்புடையார் - என்றார் நாவலர் பசுமலை சோமசுந்தர பாரதியார். இவ்விருபதாம் நூற்றாண்டில் தென்தேசத்தில் உண்டான அறிவின் பயனையெல்லாம் அனுபவிக்கச் செய்த தீரபுருஷன் இராமசாமிப் பெரியாரே என்பது பின் சரித்திரங்களில் எழுதப்படும் - என்றார் கைவல்ய சாமியார். அநீதியை எதிர்க்கத் திறமையும் தைரியமும் அற்ற ஏழைகளாய்ச்