பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை அடிதெரியும்படிக் கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் பெரியாரைப் பெரிதும் சேர்ந்ததாகும் - என்றார் வ.ரா. என்னும் ராமசாமி அய்யங்கார். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ் நாட்டில் வேறெவரையும்விட அவருக்கே அதிகம் உண்டு - என்றார் ‘கல்கி’ என்னும் ரா. கிருஷ்ணமூர்த்தி. இராமசாமிப் பெரியார் உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கு மூன்று ஆதாரங்கள் சொல்லலாம்: அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும்; அவர் கொள்கைகள் எங்கும் கண்டிக்கப் படவேண்டும்; அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும் - என்றார் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்.

அன்னையார் மறைவுக்குப் பின்னர் மிச்சமிருந்த குடும்பப் பிணைப்பும் அற்று விடவே, முன்னிலும் தீவிரமாகப் பெரியார் தேர்தல்களத்தில் குதித்தார். நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்த இந்தப் பதினேழு ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டுள்ள அருஞ்சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காட்டினார். சர்க்கஸ் கொட்டகையில் புலியும் பசுவும் ஒன்றாய் நிற்கலாம்; ரயில் வண்டியில் பறையனும் பார்ப்பானும் ஒன்றாய்ப் பிராயாணம் செய்யலாம்; இது சமதர்மம் ஆகிவிடாது! நீதிக்கட்சி ஆட்சியில் சட்டப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அநேக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன; இதைப்பற்றிக் காங்கிரசார் எண்ணியும் பார்த்ததில்லை! நீதிக்கட்சியார் ஆட்சிக்கு மறுபடியும் போனால் மக்கள்தொகைக்கு ஏற்ப அந்தந்தச் சமூகத்தார்க்கும் பதவியில், அதிகாரத்தில் விகிதாச்சாரம் தருவதாகச் சொல்கிறார்கள்; காங்கிரசார் இதைத் தேசத் துரோகம் என்கிறார்கள் நீதிக் கட்சியார் வெள்ளையருடன் அவசியத்துக்கு ஏற்ப ஒத்துழைக்கிறார்கள்; காங்கிரசார் வெள்ளையருக்கு ரகசியமாய்ச் சலாம் போடுகிறார்கள்! ஆகையால் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால், நமது சமுதாயம் ஒரு நூற்றாண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். பார்ப்பனர்களின் சுயராஜ்யம் நிலை நிறுத்தப்படும் - என்ற ரீதியில் பெரியாரின் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாய் நடந்தது.

இரட்டையாட்சி ஏற்பட்ட 17 ஆண்டுகளாய் நீதிக்கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்ததால், மனப் புழுக்கமடைந்த காங்கிரசாரும் அவர்களை அதிகம் நம்பி எதிர்பார்த்திருந்த பதவி வேட்டைக்காரர்களும் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வழங்கினர். மக்களும் அப்படியே நம்பித், தங்கள் வரிச்சுமை நீங்கும்; வறுமை பறக்கும்; வளமை சுரக்கும்; ஏகாதிபத்தியம் ஓடும்; துயரங்கள் ஒழியும்; சுயராஜ்யம் வாழும் என்றெல்லாம் எதிர்பார்த்தனர். பழசாய்ப் போன நீதிக்கட்சி மீதில் காதல் குறைந்ததும், புதுமையான காங்கிரஸ் மீது