பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

142


மோகம் பிறந்ததும் இயற்கைதானே? அதனால் 1937-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், காங்கிரசே எதிர்பாராத அளவுக்கு அது அமோக வெற்றி பெற்றது! நீதிக்கட்சி படுதோல்வி கண்டது; பெரும் தூண்களெல்லாம் அடியோடு சாய்ந்தன!

காங்கிரசார் வெறியாட்டம் போட்டனர். நீதிக் கட்சியை அய்யாயிரம் அடி ஆழக்குழி தோண்டிப் புதைத்து விட்டதாகக் காங்கிரஸ் பேச்சாளர்கள் கொக்கரித்தனர். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் காங்கிரசில் சேர்ந்து விட வேண்டும்; இனி உலகு உள்ளளவும் ஆட்சிபீடம் காங்கிரசுக்குத்தான் - என்றும் ஆர்ப்பரித்தனர்.

ஆனால், தோல்வியிலும் வெற்றி காணும் பெற்றிகொண்ட பெரியார். நீதிக்கட்சியின் தோல்வி தமக்கு அனுகூலந்தான் என்றார். தேர்தல் நடைபெறுமுன்பே அவர் கணிப்பு, வெற்றியைக் காட்டிலும் தோல்வியினால்தான் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து, பலமாக வேலை செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்பதே! ஆகவே சோர்வடையாமல், ஊக்கம் மிகுந்தவராய்த் தோழர்களை உற்சாகப்படுத்தி வந்தார் பெரியார், காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் இதுவரையில் செய்து வந்த புளுகுப் பிரச்சாரம், இனி வெட்ட வெளிச்சமாகும். இப்போதுதான் அவர்கள் உண்மையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள், தொடர்ச்சியான அவர்களது விஷமத்தனங்களுக்கு இப்போதுதான் முடிவு ஏற்படும்; மந்திரிப் பதவி ஏற்பவர்களின் சாமர்த்தியம் தெரியவரும். நம்மைப் பொறுத்தவரையில் சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு நல்ல முறையில் பாதை திறந்து விட்டது போலாகும் - என்று பெரியார் பேசி வந்தார்.

காங்கிரஸ்காரருக்கோ தலைவலி ஆரம்பித்தது. ஆட்சி அமைக்குமாறு கவர்னர்கள் அழைத்தபோது. மந்திரிகளின் அன்றாட அலுவல்களில் கவர்னர்கள் கலந்து கொள்வதில்லை என உறுதி தரவேண்டும் என்று கேட்டனர்; அரசினர் இதனை ஏற்க மறுத்தனர்! அதனால், சுமார் மூன்றரை மாதம் வரை, கவர்னர்களே இடைக்கால மந்திரி சபை அமைத்தனர். நீதிக்கட்சி இந்த இடைக்கால மந்திரி சபையில் பொறுப்பேற்கக் கூடாது என்று பெரியார் சொல்லிவிட்டதால், யாரும் ஏற்கவில்லை . கே.வி. ரெட்டி, எம். சி. ராஜா, கலிபுல்லா, பன்னீர் செல்வம், முத்தையா செட்டியார், பாலட் ஆகியோர் பதவியில் அமர்த்தப்பட்டனர். இதனைக் காங்கிரசார் அற்பாயுள் மந்திரிசபை எனக் கேலி பேசினர்.

காங்கிரஸ்காரர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது; இவை முன்னர் படைக்கப்பெற்ற விருந்தை எவ்வளவு நேரம் அருந்தாமல் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும்? காங்கிரஸ்காரர்கள் கடைசியாகப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தனர். சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் தலைமையில் முதன் முறையாகச் சென்னை மாகாணத்தில்