பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்றது 1937 ஜூலை 14-ஆம் நாளில்! முரண்பாடாக நடந்து கொண்டதால் இந்தக் காங்கிரஸ் மந்திரிசபைக்குப் பெரியார், சரணாகதி மந்திரிசபை எனப் பெயர் சூட்டினார். வீம்புடன் முதலில் ஒதுங்கியிருந்தவர்கள், பின் விட்டுக்கொடுத்த பண்பையே பெரியார் சரணாகதி என்றார்; தவறல்லவே? சுயமரியாதைக்காரராக இருந்த எஸ். ராமநாதன் இந்த மந்திரி சபையில் ஒரு மந்திரியானார். முதலமைச்சரை வைத்து ஒரு மாட்டு வண்டியை இவரே ஓட்டிச் சென்றதாகப் புகைப்படங்கள் வெளியாயின. அது முதல் இவர் கட்டை மாட்டு வண்டி ராமநாதன் என்று கேலி செய்யப்பட்டார். இந்த மந்திரிசபையில் ஆச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யருக்கு இடந்தராமல் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்காருக்குப் பதவி தந்து விட்டதால், சத்திய மூர்த்தி இதன்பின் ராஜாஜியின் எதிரியாகவே விளங்கினார்.

நீதிக்கட்சியினரால் 1935-ல் சென்னையில் துவக்கப்பட்டு, வாரம் இருமுறையாயிருந்து, பின்னர் நாளேடு ஆகிய "விடுதலை" பெரியாரிடம் 1937-ல் ஒப்படைக்கப்பட்டது. செய்தித்தாள். என்னும் புதிய படைக்கலன், போர்வீரராகக் களத்தில் முன்னணியில் நின்று கொண்டேயிருக்கும் பெரியாரிடம் உரிய நேரத்தில் வரலாயிற்று! அதனை ஈரோட்டுக்கே மாற்றிக் கொண்டார் பெரியார். “விடுதலை”யின் முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், சரணாகதி மந்திரிசபை - இன்று...... ஆவது நாள்! இன்னும் எத்தனை நாள்? என்று பெட்டிச் செய்தி நாள்தோறும் வெளியிடப்பட்டு வந்தது மிக்க பரபரப்பாயிருந்தது! எப்படித்தான் பெரியார் முன்கூட்டி எதிர்பார்த்தாரோ? - 1939 அக்டோபர் மாதத்தில், 28 மாத ஆட்சிக்குப் பின், காங்கிரஸ் பதவியை விட்டு வெளியேறியது. அதன்பின் 1946- வரை சென்னை மாகாணத்தில் ஆலோசகர்கள் உதவியுடன் கவர்னர் ஆட்சியே நடந்தது!

காங்கிரசார் உள்ளாட்சி நிறுவனங்களான பஞ்சாயத்து, நகராட்சி, ஜில்லாபோர்டு ஆகிய அனைத்திலும் வெற்றி பெற்றனர். தோல்வியுற்றதால் சிலர் காங்கிரசிலே போய்ச் சேர்ந்து கொண்டனர்! இப்படிப் பதவிக்காகக் கட்சி மாறியவர்களைப்பற்றிப் பெரியார் என்ன நினைத்தார் என்பதைக் கவனித்தால், 1937 ஏப்ரல் 5-ஆம் நாள் “குடி அரசு” கூறுவது, இன்றும் என்றும் பொருந்துமே! - “காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால்தான் இனிப் பதவி, உத்தியோகம் தமக்குக் கிட்டும் என நம்பிச் சிலர் அங்கே போகிறார்கள். இந்த முட்டாள்தனமான தேர்தல், அந்த முடிவுக்கு வரத் தூண்டுயிருக்கிறது. யார்யாருக்குப் பதவியினால் மாத்திரம் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ - அவர்கள்தான் போயிருக்கிறார்கள்! வேறு வாழ்வுக்கு வகையில்லாதாரும் போகிறார்கள். இவர்கள் நீதிக் கட்சியிலிருந்து, ஒருக்கால் பதவிக்குச்