பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்




தொழிற் சங்கவாதியும், நீதிக்கட்சித் தலைமகனுமாகிய பாசுதேவ் இவ்வாண்டு நவம்பர் ஆறாம்நாள் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது பெரியாரின் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 1939- நவம்பரில், இருந்த பழைய அமைப்பின் உதவியால். சத்தியமூர்த்தி அய்யர் மேயரானதற்குக் காங்கிரஸ் - பார்ப்பன வட்டாரங்கள் குதூகலித்துக் கிடந்தன! சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் 1940 நவம்பர் 11-ஆம் நாள் பெரியாரைச் சந்தித்துச் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு யோசனை கூறினார். பெரியார் இசைய மறுத்தார். இக்காலகட்டத்தில் அண்ணாவின் கட்சிப்பணி உச்ச நிலையிலிருந்தது. சென்னையில் சீர்திருத்தத் தொண்டர்கள் அண்ணா தலைமையில் மாநாடு கூடிப் பெரியார் கருத்துகளுக்கு உரமேற்றினர். பின்னாட்களில் எதிர் முகாம்களுக்குச் சென்றுவிட்ட வேளுக்குடி கா.மு.ஷெரீப், தமது கவிதைகளைக் “குடி அரசு” இதழ்களில் தொடர்ந்து யாத்தளித்து வந்தார். “குடி அரசு”, “விடுதலை” ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் சென்னையிலிருந்து வெளிக்கொணர ஏற்பாடு செய்யப்போவதாகக் “குடி அரசு” இதழில் டிசம்பர் 29-ல் பெரியார் அறிக்கை வெளியிட்டார். அதே போன்று 1941-சனவரி 4-ஆம் நாள் நிறுத்தப்பட்ட “குடி அரசு” மீண்டும் ஈரோட்டிலிருந்து 1943 அக்டோபர் 16-ஆம்நாள்தான் வெளியாயிற்று! அப்போது கைவல்யம் அவர்கள் “வந்தாயா குடி அரசே?” என்று வாழ்த்தி, வரவேற்றுத் தம் பேனாவை உருவிப் புறப்பட்டார். எதிர்த்தோரைத் தாக்குதலுக்கு!

ரயில்வே நிலையங்களிலுள்ள உணவு விடுதிகளில் - இவ்விடம் பிறாமணாளுக்கு, இவ்விடம் இதராளுக்கு - என்று தனித்தனியே இருவேறு இடங்கள் சாதி அடிப்படையில் இருந்ததைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து வந்தார். பார்ப்பதற்கு மிக அற்பமானதாக இது தோன்றினாலும் பெரியாருடைய தொலை நோக்குப் பயணத்தில் இதெல்லாம் காலில் இடறும் சிறுகல் எனினும், சமூக இழிவு ஒழிப்பிற்கு, இதனை நீக்குவது அவசியம் எனப் போராடினார். ரயில் வண்டிகளில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்றுதான் இருந்ததே தவிரப் பிராமணாள் வகுப்பு சூத்திராள் வகுப்பு என இருந்ததில்லையே! 20-3-1941-ல் ரயில்வே நிர்வாகத்தின் இணக்கத்தினால் இந்த பேதம் ஒழிக்கப்பட்டது: பெரியாருக்கு வெற்றிதானே? (“விடுதலை” 21-3-41 அன்று பெட்டிச் செய்தி).

சோவியத் ரஷ்யாவில் பொதுவுடைமை இயக்கத் தந்தையான லெனினுடன் தம் இளமைக் காலத்தில் இணைந்து பணியாற்றிய. வங்க வீரர் எம்.என். ராய், பின்னர் இந்தியா திரும்பிக், காங்கிரசில் இருந்து, தமது தீவிரப் போக்கினுக்கு அது ஏற்றதல்ல என விலகி, ரேடிக்கல் டெமக்ரடிக் பார்ட்டி எனும் தீவிர ஜனநாயகக் கட்சியினைத்