பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

166


துவக்கினார். பெரியாருக்கு அவரிடத்திலும், அவரது முற்போக்குக் கொள்கையிடத்திலும் மிகுந்த பற்று உண்டு. அவரது கருத்துகளைக் “குடி அரசு” இதழில் மொழி பெயர்த்து வெளியிடச் செய்வார். 1941-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் தமது துணைவியாரான ஜெர்மானிய மாதரசி எல்லென்ராயுடன், சென்னைக்கு வருகை தந்து, பெரியாரின் விருந்தினராக இருந்தார். இருவரும் தத்தம் சிந்தனை விருந்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்கிக், காங்கிரசல்லாத மந்திரி சபையை முதலில் சென்னையில் அமைத்து, வழிகாட்ட வேண்டும் எனப் பெரியாரை எம்.என். ராய் கேட்டுக் கொண்டார்.

நாடெங்கிலும் திராவிடர் உணர்வு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது! ஆங்காங்கு ஏற்கனவே இருந்து வந்த பற்பல பார்ப்பனரல்லாதார் சங்கங்களெல்லாம் திராவிடர் கழகங்களாக மாற்றம் பெற்றன. பெரியார் மீண்டும் 1942-ஆம் ஆண்டில் ஒருமுறை வடநாடு சுற்றுப்பயணம் சென்றார். அங்கிருந்து தகவல் தந்து அண்ணாவும் புறப்பட்டார். “குடி அரசு” இதழ் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து சில எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய அச்சகத்துத் தேவைகளைப் பெரியார் கொடுத்து உதவ, அண்ணா காஞ்சியிலிருந்து “திராவிட நாடு” என்ற வார இதழைத் துவக்கினார். 1942 மார்ச் 8-ஆம் நாள், முதல் இதழ் வெளிவந்தது. “குடி அரசு” இல்லாத குறையை அது போக்குவதாகவும், “திராவிட நாடு” இதழ் வளர்ச்சிக்கு ஆங்காங்கு தோழர்கள் நிதியளிக்க வேண்டுமென்றும் பெரியார் 1-4-1943-ல் அறிக்கை வெளியிட்டார். தாமே நூறு ரூபாய் அளித்தார். காஞ்சியில் திராவிட நடிகர் கழகம் ஏற்படுத்தித், தாம் எழுதிய சந்திரோதயம் என்னும் புரட்சி நாடகத்தில், தாமே மூன்று வேடங்கள் ஏற்று நடித்துத் தமிழ் நாடெங்கும் அந்த நாடகத்தின் வாயிலாகவும் அண்ணா நிதி திரட்டினார். திருவாரூரிலிருந்து மாணவர் மு. கருணாநிதி 1942 ஏப்ரல் 26-ம் தேதியிட்ட ”திராவிட நாடு“ இதழில் இளமைப் பலி என்ற கட்டுரை தீட்டியிருந்தார். இவர் திருவாரூரில் “முரசொலி” என்ற சிறு ஏடு ஒன்று துவக்கிக் காலணா விலையில் 1942 ஆகஸ்ட் 10-ஆம் நாள் முதல் வெளியிட்டு வந்தார். வேகமும் விவேகமும் மிக்க எழுத்துகளில் பெரியாரின் கருத்துகள் “முரசொலி”யில் மிளிர்ந்தன.

பாரத மாதாவைத் துண்டாடுவதா? என்று பதைத்தவர்கள் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். இராஜாஜி காங்கிரசிலிருந்து விலய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவு தந்தார். அவருக்காகக் துவக்கப்பட்ட “கல்கி” வார இதழ் பிரிவினைக் கொள்கையைத் தாங்கி எழுதியது. 1942 ஏப்ரல் 23-ஆம் நாள், பெரியார் ஆச்சாரியாரின் பாக்கிஸ்தான் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுச் தென்னாட்டில்