பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நீதிக்கட்சியின் உடன்பாடு பெறாமல் எந்தத் திட்டமும் நிறைவேற்றப் படக்கூடாது - முடியாது என நினைவுறுத்தினார். ஈரோட்டில் பெரியாரின் வீட்டிற்கே வந்து ராஜாஜி, திராவிடநாடு பிரிவினைக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இராமசாமி நாயக்கர் கேட்கும் திராவிடஸ்தானையும் திராவிட மக்கள் கேட்டால் பிரித்து விடவேண்டியதுதான் என்று வெளிப்படையாக ஆதரவு தந்ததோடு அதன் அவசியம் பற்றியும் பேசினார். 1942 ஆகஸ்டு சட்ட மறுப்புக் கலவரங்களால் பொது மக்களுக்குத் தொல்லைதான் எனப் பெரியார் கருதினார். இதனால் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டதை எடுத்துக் காட்டினார். ஆங்காங்கு காங்கிரஸ்காரர்களால் ஏற்பட்ட அழிவு, சேதம், சொத்து நாசம் ஆகிய மோசமான செயல்களைக் கண்டித்தார். இதனால் தான் அடுத்த அக்டோபர் 18-ஆம் நாள் சென்னை மாகாண கவர்னரைச் சந்தித்து, துவக்கத்திலிருந்து தாம் ஆகஸ்டுக் கலவரங்களைக் கண்டனம் செய்ததை எடுத்துக் காட்டி, அரசினர் விதித்த கூட்டு அபராதத் திட்டத்திலிருந்து நீதிக் கட்சியினர்க்கு விலக்களிக்கக் கோரினார், வைசிராய், கவர்னர் இருவருமே 1942-ஆம் ஆண்டில் மீண்டும் வேண்டுகோள் விடுத்தும், பெரியார் சென்னை ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்தார். பெரியாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டுமென அண்ணா அக்டோபர் 25 “திராவிட நாடு” இதழில் கருத்தறிவித்தார்.

1942 இறுதித் திங்களில் பெரியாருக்கு உடல் நலமில்லை . சென்னைப் பொது மருத்துவமனையில் சில நாள் இருந்துவிட்டு, ஈரோடு சென்று ஓய்வு எடுத்து வந்தார். ஈரோட்டிலிருந்து விடுதலை“ நாளேடு மீண்டும் வெளியாயிற்று. சென்னையில் சர். ஏ. ராமசாமி அவர்களின் மூத்த மகன் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி (பாரிஸ்டர்) “லிபரேட்டர்” என்ற ஆங்கில நாளேட்டினை 1942 டிசம்பர் 7-ஆம் நாள் துவக்கினார். இது நீதிக் கட்சியின் படைக்கலனாக விளங்கியது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திருவாங்கூர் மகாராணியும், மன்னரும் தமது நல்லெண்ண அறிகுறியாய், சமஸ்கிருத வளர்ச்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்தனர். இதைக் கேள்வியுற்ற பெரியார், உள்ளங் கொதித்து, வடமொழி வளர்ச்சிக்கு இந்தப் பணம் செலவிடப்படலாகாது என வலியுறுத்தியும், வற்புறுத்தியும் போராடினார். இறுதியில், மாணவர் விடுதியினை விரிவுபடுத்திட அத்தொகையினை செலவழிப்பதாகப் பல்கலைக் கழக நிர்வாகம் முடிவெடுத்த பின்னரே, பெரியார் ஓய்ந்தார். திருவாங்கூர் அரசர் இதற்கு இணங்காவிடில் பணத்தையே திருப்பித் தந்துவிடலாம் என்றார் பெரியார்!

உடல் நிலை சரியானதும், மீண்டும் பெரியாரின் சுற்றுப் பயணங்கள் தொடர்ந்தன. இளைஞர்களைப் பொதுவுடைமைக்