பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

168


கொள்கைகள் பெரிதும் கவர்ந்ததால், அவர்கள் அங்கே ஈர்க்கப்படுவதைத் தடுக்கவே, தாம் 1930-ல் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியதாகக் காந்தியார் உண்மையை ஒப்புக் கொண்டார்; இது காந்தியாரின் சனாதனப் போக்கையே காட்டுகிறது என்று பெரியார் எடுத்துக் காட்டினார். பெங்களூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பங்கேற்றார்; பின்னர் ஜூலை 1943-ல் உடல் நலிவுற்றுச் சில காலம் சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்தார். ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் புதிதாகத் தொடங்கப்பெற்று, முறுக்கோடு பவனி வந்த தமிழிசை இயக்கத்துக்குப் பெரியார் தமது ஆதரவைத் தெரிவித்தார். கொச்சி திவான் ஆர்.கே. ஷண்முகம், சர் ஏ. முத்தையா செட்டியார் முதலியோர் முன்னோடிகளாயிருந்தனர்.

என்னதான் நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தாம் இருந்த போதிலும், சுயமரியாதை இயக்கத்தில்தான் தமக்கு நாட்டம் அதிகம் எனப் பெரியார் காட்டி வந்தார். நீதிக் கட்சியைப், பெரியாரைத் தவிர இன்னொருவர் கூட நடத்தி விடலாம்; ஆனால் சுயமரியாதை இயக்கத்துக்குப் பெரியார்தான் இருக்க வேண்டும் - என்று “விடுதலை” தலையங்கம் தீட்டியது. மேலும் இயக்கத்துக்குச் சரியான ஒரு வாரிசு வேண்டும் என்பதாகவும் பெரியார் தெரிவித்தார். 1943 - செப்டம்பர் 13-ஆம் நாள் ஏட்டில், பொறுப்பாக இருந்து; கட்சி, பத்திரிகை, பதிப்பகம், அச்சகம் ஆகியவற்றைக் கவனிக்க ஆட்கள் தேவை என்றும், வருகின்றவர் சிறிது காலம் இருப்பதும், திருமணமோ வேறு நிலையோ கிடைத்ததும் அகன்று விடுவதுமாயிருக்கிறார்கள். இது இயற்கைதான் என்றாலும், காரியங்கள் நடைபெறத் தடையாகின்றன என்றார் பெரியார். அதனால் “விடுதலை” ஏட்டைச் சென்னைக்கு மாற்றுவதாக அறிவித்தார். இப்போது “குடி அரசு” துவக்கப்பட்டதால், ஈரோட்டிலிருந்து “விடுதலை” 1943 அக்டோபர் 18-க்குப் பிறகு வெளியாகவில்லை .

1933 - ல் நாகம்மையார் காலமான பிறகு, பெரியாருடைய தனிப்பட்ட தேவைகளைக் கவனிக்க அணுக்கமாக யாருமே யில்லை! அண்ணார் வீட்டிலோ, தங்கை வீட்டிலோ ஈரோட்டிலிருக்கும்போது உணவு கிடைத்துவிடும். ஆனால் இப்போதெல்லாம் பெரியாருக்கு ஓயாத உழைப்பினால், அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அம்மாதிரி நேரங்களில், ஒரு செவிலிப்பெண் அளவிலாவது உடனிருந்து பரிவு காட்ட ஒருவர் தேவையல்லவா? இந்த எண்ணத்தை 1943 அக்டோபர் 23-ஆம் நாள் “குடி அரசு” இதழில் செல்வி கே. அரசியல் மணி அம்மையார் தெரிவித்தார்.

நவம்பர் 19-ம் நாள் ஈரோட்டில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சந்திரோதயம் நாடகத்தின் வாயிலாக அண்ணாவின் “திராவிடநாடு” வளர்ச்சிக்காக 4000 ரூபாய் கிடைத்தது. இந்த