பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

176


புரட்சிகரமான சுயமரியாதைக் கருத்துகளை விளக்கி நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் சி.பி. சிற்றரசு எழுதிய போர்வாள், கலைஞர் மு. கருணாநிதி எழுதிய தூக்குமேடை, திருவாரூர் தங்கராசு எழுதிய ரத்தக் கண்ணீர் இவற்றைத் தமிழ்நாடு முழுதும் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து நடத்தினார். அரசின் அடக்கு முறைக்கு அடிக்கடி ஆளாகிப், போராடி வென்றார். கட்சிக் கட்டுப்பாடுகட்கு ஆட்படாமல் பெரியாரின் உண்மைத் தொண்டராக விளங்கிய அச்சமறியா இயல்பினர், 1967-ல் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனைச் சுட்டதாக நடந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளிவந்த பின்பும், தனிப்பட்ட முறையில் கொள்கை விளக்கமும் நடிப்பும் தொடர்கிறார்.

சேலம் செவ்வாய்ப் பேட்டையில் கடந்த ஆண்டே துவக்கப் பட்ட திராவிடர் கழக முதலாண்டு விழாவில், சனவரி 16-ஆம் நாள், பெரியார் பங்கேற்றார். பிப்ரவரி 13-ஆம் நாள் சென்னையிலும், 20-ஆம் நாள் திருச்சியிலும் மாவட்ட நீதிக்கட்சி மாநாடுகளைத் திறந்து வைத்தார். சுதந்திரத் திராவிட நாடு பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், புராண இதிகாசக் கதைகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தியும் திராவிட மக்களுக்கு எழுச்சியுண்டாக்கினார் பெரியார். தமிழ்ப் புலவர்களும், ஆசிரியர்களும், இளம் மாணாக்கர்க்குப் புராணக் கதைகளைப் பாடமாகப் போதிக்காமல், அறிவு வளர்ச்சிக்கு உகந்தவற்றையே கற்பிக்க வேண்டிப் பெரியார் பல கட்டுரைகள் தீட்டினார்.

1944-ஆம் ஆண்டின் துவக்கமே பெரியாரின் மொழிப்படி நற்குறிகளின் துவக்கமாகத் தென்பட்டது. தென்னகத்தில் பெரியாரின் பெருந்தொண்டால் புதிய எழுச்சி ஒன்று எங்கணும் பரவி வியாபித்தது. ஒன்று கலைத்துறையின் மறுமலர்ச்சி! மாணாக்கர் எழுச்சி மற்றொரு புதுமையாகும். 1942-ஆகஸ்டுக் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் பெரும் பங்கு கொண்டனர், அதன் பின்னர் உண்மை உணர்ந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள், தாம் தவறான பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்து, தந்தை பெரியார் காட்டும் பகுத்தறிவு ஒளியில் கவனஞ் செலுத்தத் துவங்கினர். ஆரிய வஞ்சகத்தால் திராவிடர் எதிர்காலம் இருட்டாவதை உணர்ந்தனர். பெரியாரின் “குடி அரசு”, அண்ணாவின் “திராவிட நாடு” இதழ்கள் உணர்வுத் தீயை மூட்டி விட்டன. மாணவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடச் சட்டங்கள் தடை செய்தன. அதனால் முதலில் பெரியாரின் சம்பந்தமில்லாது கும்பகோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு 1944 பிப்ரவரி 19, 20 இரு நாட்களிலும், மிகுந்த எழுச்சிமயமாய் நடைபெற்றது. அண்ணாவும் பிறரும் அரிய சொற்பொழிவுகளை ஆற்றினார்கள். மாணவர் மட்டுமல்லாது