பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கொண்டோ, இல்லாமலோ, ஒலி பெருக்கி முன்னாலோ, இல்லாமலோ - நின்றவாறேதான் இதுவரை பேசியிருக்கிறார். 1950 அக்டோபர் 21-ஆம் நாளன்று செம்பனார்கோவில் பொதுக் கூட்டத்தில்தான் முதன்முதலில், நின்று பேச இயலாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறே, பேசத் தொடங்கினார்.

சென்னையில் காந்தியார் நினைவு நாள் கூட்டம் காங்கிரசார் நடத்தினர். அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் காமராசர், வீணே திராவிடர் கழகத்தாரைத் தாக்கிப் பேசினார். குழப்பம் விளைவிப்பதாகவும், ஒழுங்கீனமான முறைகளில் நடப்பதாகவும், சர்க்கார் கடுமையாக இவர்களை அடக்க வேண்டும் என்னும் காமராசர் அரசினரைத் தூண்டி விட்டார். போலிசாருக்கு இந்த ஜாடை போதாதா? மறுநாள் 1.11.50 அன்று நாடு முழுதும் நடந்த வட நாட்டார் துணிக்கடை மறியலில் ஈடுபட்ட கழகத் தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கினர்; கைது செய்து, வழக்குப் போட்டு, தண்டனை தந்து, மகிழ்ந்தனர். அடக்குமுறைச் செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தபோதே, 2.11.50 அன்று ஆங்கிலப் பேரறிவாளன் பெர்னாட்ஷா மறைவுச் செய்தியும் செவிகளில் தாக்கியது!

சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பெரியார் வகுப்புரிமை, சுரண்டல் தடுப்புப் பிரச்சினை பற்றி 7.11.50 அன்று விளக்கவுரையாற்றினார். பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் ஒரு கூட்டத்தில் “இந்து”, “மித்திரன்” பத்திரிகைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். காமராசர் தனக்குப் பிரதம தளபதியாக அப்போது சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களை ஏவி விட்டார். 1948-ல் இந்தி எதிர்ப்புப் பிரச்சினையில் கழகத்தின் பக்கமிருந்த ம.பொ.சி. 1950-ல் திராவிடர் இயக்கங்களை ஒழிப்பதே தம் முதற்கடமை எனச் சூளுரைத்தார்.

கண்ணகியின் வழக்குரை காதையினை விளக்கமாகக் கூறும் சிலம்புச் செல்வர் 1967-ல் தி.மு.க. தேர்தல் சின்னத்தில் வென்றதும், 1971-ல் தோற்றும், மேலவை உறுப்பினராகித், துணைத் தலைவர் பதவி பெற்றதும், 1977-ல் அ.இ.அ.தி.மு.கழகத்தின் ஆட்சியில் மேலவைத் தலைவர் பதவி ஏற்றதும், 1979-ல் டாக்டர் பட்டம் பெற்றதும் அந்தச் சூளுரையின் விளைவுகளோ என அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்

நவம்பர் 20-ஆம் நாள் திருச்சியில் மத்திய நிர்வாகக் குழுவினர் கூடினர். டிசம்பர் 2- ல் சுரண்டல் தடுப்பு மாநாடும், 3-ல் வகுப்புரிமை மாநாடும் அங்கே நடத்துவதென்றும், 25பேர் கொண்ட பிரச்சாரப் படை ஒன்று மதுரையில் புறப்பட்டுச் சென்னைக்குச் செல்வதென்றும் முடிவாயிற்று. 12.11.50 வரை சென்னை மறியலில் 107 பேர்