பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பட்டது; பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் காங்கிரஸ் அரசு பரிசிலனை செய்து வந்தது; கோயில்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டது; ஜமீன்தார் முறை ஒழிந்தது; 6 அவுன்ஸ் அரிசியை 7 அவுன்சாக உயர்த்தியது; தஞ்சையில் சேரிகளில் மக்களை வேட்டையாடியதை நிறுத்தியது; நெசவாளர்கள் விழிப்படைந்து எழுந்தது; இறுதியாக சென்னைக் கடற்கரை மணற்பரப்பில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. (திராவிடர் கழகந்தான் முதல் கூட்டம் நடத்தியதாகத் தெரிகிறது!)

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் தலைவரும். செயலாளரும் வடநாட்டிலிருந்து சென்னை வந்து, 3.2.51 அன்று பெரியாரைச் சந்தித்துக் கலந்து, ஆலோசனை செய்து, விடைபெற்றுத் திரும்பினர். வடநாட்டுக் கடை முன்பு, சைனா பஜாரில் நடைபெற்று வந்த மறியல் 1.3.51 முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. 500 பேர் அது வரை கைதாகியிருந்தார்கள். ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 8.3.51 அன்று 128ஆவது நாளாக மவுண்ட் ரோட் செல்லாராம் கடை முன் மறியல் துவங்கிற்று; ஞாயிற்றுக்கிழமை கடைக்கும், மறியலுக்கும் விடுமுறை. இந்த மறியலின் முதல்நாள், “விடுதலை” ஆசிரியர் குத்தூசி குருசாமி தளபதி; ஒரே நிமிடத்தில் கைதாகி விட்டார். இங்கு மறியல் களம் மாற்றப்பட்ட பின்னர், அரசின் போக்கும் மாறியது. தண்டனை 6 மாதம் வரை போயிற்று. மறியல் செய்யத் தொடங்கியவுடன் அடுத்த நிமிடத்திலேயே கைது செய்யப்பட்டனர். பொது மக்களின் ஆவலும் பரபரப்பும் ஆதரவும் பெருகியதே காரணம்! முன்பு சைனாபஜார் மறியலில் கடைக்காரர்கள், வாயில் முன் கார்களை நிறுத்தி, மறியல் தொண்டர்களுக்கு இடையூறு விளைத்த போதுகூட, அரசு கண்டுங்காணாமல் நடந்தது.

வகுப்புரிமைப் போரில் பெரியார் பெருவெற்றி பெற்றார். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களும் மாநாடுகளும் ஏராளமான உணர்ச்சி எழுப்பின. சர்தார் வல்லபாய் பட்டேலின் முழு முயற்சி காரணமாக அரசியல் சட்டம் 15-வது விதியில் 4-வது உட்பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டம் ஏற்பட்ட ஓராண்டில் இதுதான் முதலாவது திருத்தமாகும். அதன்படி சமூக நிலையாலும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள், அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் ஆகியோரின் முன்னேற்றங்கருதி அரசு செய்யும் எந்தத் தனி ஏற்பாட்டையும் இந்த விதியின் ஒரு பிரிவோ; அல்லது 29-வது விதியின் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது; என்ற திருத்தம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1951 பிப்ரவரியில்,

இதுவரை காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுக் கண்ட பலன் பசியும், பட்டினியுந்தான்! வரவிருக்கும் 1952 பொதுத் தேர்தலில் யாரும் இனி