பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

222


காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் - என்று பெரியார் அணைக்கரைப் பொதுக்கூட்டத்தில் 13.3.1951-ல் முதல் முழக்கம் செய்தார். எங்களை உள்ளே போய்ச் சட்ட மன்றத்துக்குள் போராடச் சொல்கிறார்கள் சிலர்) அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது வெளியில் இருந்து கொண்டு தான் வீட்டை இடிக்க வேண்டுமே தவிர, வீட்டுக்குள் இருந்து இடித்தால், நம் தலை மீதுதான் விழும் - என்றார், ஈரோடு பொதுக் கூட்டத்தில் பெரியார்!

பகுத்தறிவின் இன்றியமையாமை குறித்து விளக்க வந்த பெரியார், மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து எவ்வளவோ மாறுபட்டு முன்னேற்றம் கண்டிருக்கிறான், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால். ஆனால் ஆன்மிகத் துறையில் மட்டும் அறிவை உபயோகிக்கத் தவறுகிறான். ஒரு விருந்தாளிக்கு இலை போட்டுப் பதார்த்தங்கள் பரிமாறாமல் ஒரு உருண்டை சாணியை இலையில் வைத்தால், உடனே எழுந்து கோபித்துக் கொண்டு போய்விடுவான். அதே சாணி உருண்டைக்கு ஒரு பொட்டு வைத்து, இரண்டு அறுகம்புல்லை அதன் மேல் செருகினால், பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொள்வான். ஆரியம் அந்த அளவு அவன் புத்தியை மழுங்க அடித்துவிட்டது. இவை எல்லாம் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல, புத்தர் கொள்கைகளை அழித்தொழிக்க, நமது மன்னர்களைத் தூண்டிவிட்டுத் தமிழ்நாட்டில் ஆரியர்கள் இவ்வளவு கோயில்களைக் கட்டினார்கள். இவ்வளவு தெய்வங்களை இறக்குமதி செய்தார்கள். இவ்வளவு வண்டி வண்டியாகப் புராணக்கதைகளைப் புகுத்தினார்கள். இவ்வளவு கோயில் கட்டியிருக்கிறார்களே, ஆரியன் எவனாவது ஒரு கல்லைச் சுமந்திருப்பானா? ஒரு ஆரியப் பெண் ஒரு கூடை மண்சுமந்திருப்பாளா? எந்த ஒரு ஆரியனாவது கோயிலுக்கென்று ஒரு காணி நிலம் எழுதி வைத்திருப்பானா? எல்லாம் திராவிடர் உழைப்பு, திராவிடர் சொத்து. ஆனால் திராவிடர் உள்ளேபோக உரிமையில்லை! என்ன நியாயம் - என்று பெரியார் வினாத் தொடுத்தார்.

நெடுங்காலம் விசாரணையின்றிச் சிறையிலிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர் ஏ.கே. கோபாலன் ஒரு ஹெபியஸ் கார்ப்பஸ் மனுக் கொடுத்துச் சென்னை ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். “விடுதலை” ஏடு இதில் பெரும்பங்கு ஏற்றது. அதே போல் தெலிங்கானா போராட்டத்தில் 12 இளைஞர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததை மாற்றுமாறு “விடுதலை” கோரியது. பின்னர் தூக்குத் தண்டனை ரத்தாகி அவர்கள் உயிர் காக்கப்பட்டது.

வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் 151 நாள் நடைபெற்றது. 556 பேர் கைதாயினர். நெசவாளர் குரலுக்குச் செவிசாய்த்து, அரசு சில சலுகைகளை வழங்கியது. அதனால் மறியலை நிறுத்திக் கொள்ள, 1.4.51 திருச்சியில் கூடிய மத்திய செயற்குழு தீர்மானித்தது. காங்கிரஸ்