பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மந்திரிகளுக்குக் கருப்புக் கொடி காட்டி, அவர்களை ராஜிநாமா செய்யக் கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாடெங்கும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் 1951 ஏப்ரல் 22- ல் கொண்டாடப்பட்டது. திருச்சிப் பொதுக் கூட்டத்தில் பெரியார் பங்கேற்றார். சென்னைக் கடற்கரையில் நடந்த முதல் கூட்டத்திற்கு, மாலை 8 மணி வரையிலுமே அனுமதி தந்திருக்கும் லட்சக் கணக்கில் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. சா.குருசாமி, சி.வி. ராஜகோபாலாச்சாரி, எஸ். ராமநாதன், கே.டி.கே. தங்கமணி, மலேயா சாம்பசிவம் ஆகியோர் பேசினர். 14.4.51- ல் டாக்டர் அம்பேத்கரின் 59-வது பிறந்த நாள் விழா, தமிழகமெங்கும் திராவிடர் கழகத்தாரால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மே திங்களில் கோவை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் நடந்த வகுப்புரிமை, சுரண்டல் தடுப்பு மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார். இலங்கையில் தனிநாடு கேட்டுத், தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் உரிமைப்போர் தொடுத்ததைப் பெரியார் ஆதரித்தார். காஞ்சியில் அமைச்சர் பக்தவத்சலத்திற்கம், நாகை, மாயூரம் பகுதிகளில் கோபால் ரெட்டிக்கும் கழகத்தார் கருப்புக் கொடி காட்டினர். 17.5.51- ல் மத்திய அமைச்சர் ஜகஜீவன் ராமுக்குத் தி.மு.கழகம் கருப்புக்கொடி காட்டியது. பார்லிமெண்ட் தேர்தலில் பார்ப்பனருக்கு வாக்களிக்க வேண்டாம். காங்கிரசுக்கோ ஒரு பிடி மண்ணைப்போடுங்கள் - என்று கடுமையாகப் பேசி வந்தார் பெரியார். ஜூலையில் தி.க. மாகாண மாநாடு நடைபெற்றது.

சேலத்தில் 22.7.51- ல் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், பெரியார் திராவிட நாடு பிரிவினை ஏன் அவசியம் என விளக்கினார்:- வெள்ளைக்காரன் இன்னும் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலை இங்கேயே விட்டு வைத்துச், சுரண்டிக் கொண்டிருக்கிறான். வடநாட்டான் கொள்ளையனாகவே மாறிச் சுரண்டுகிறான். இங்கேயிருந்து கொண்டே, பார்ப்பான் சுரண்டுகிறான். நாம் தனி நாடு கேட்டால், சிறிய நாடு; வாழ முடியுமா? என்கிறார்கள். பாக்கிஸ்தான் கேட்ட போதும், இப்படித்தான் சொன்னார்கள். நீயாகத் தருகிறாயா? நான் ரஷ்யாவை உதவிக்கழைத்து வாங்கிக் கொள்ளட்டுமா? என்று ஜின்னா கேட்டதும் பணிந்தார்கள். நமக்கு அத்தகைய மான உணர்ச்சி வேண்டும் - என்றார் பெரியார்.

அரசியல் சட்டம் நியாயமாகச் செய்யப்படவில்லை . அம்பேத்கார் தவிர, டி.டி.கே., அல்லாடி, திருமல்ராவ், ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லிம் இருந்தார்கள். நமக்காக யார்? எனவே, சட்டப்படியோ, காங்கிரசார் தந்த வாக்குறுதிப் படியோ, அரசியல் சட்டம் இயற்றப்படவில்லை . அதை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்காக, வரும் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் - என்பதாகத் திருச்சியில் 17.9.51- ல் பெரியார் பேசினார்.