பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

228


ஆதரித்தது. சிறையிலிருந்தவர்கள், தலைமறைவாயிருந்தவர்கள் ஆகிய கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் போட்டியிட்ட அதிசயமெல்லாம் நடந்தது.

கடந்த 27 ஆண்டுகளாகத் தாம் செய்து வந்த காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முழுவலிமையுடன் பெரியார் செய்து வந்தார். அது நல்ல பயனைத் தந்தது. இந்தப் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில், காங்கிரசு 152 இடங்களையே பெற முடிந்தது. காங்கிரசல்லாதவர் 223 இடங்களைச் சட்டமன்றத்தின் தேர்தலில் கைப்பற்றினர். இதில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றோர் 43 பேரும் இருந்தனர். காங்கிரசல்லாத மந்திரி சபை அமைய எல்லா வாய்ப்புகளும் இருந்தன. வெற்றி பெற்ற மணலி கந்தசாமி போன்ற கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் விடுவிக்கப்பட்டனர். முதல் மந்திரியாயிருந்த குமாரசாமி ராஜா தேர்தலில் தோல்வியுற்றும், பதவியை விடுவதாயில்லை. இந்நிலையில் டெல்லி ஆட்சி பீடம் சென்னை மாகாண கவர்னராக ஸ்ரீ பிரகாசாவை நியமித்தது. இவர் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் ஒருங்கே பயின்றவர், காங்கிரஸ் கட்சிக்காரர், இந்திப் பிரியர். எனவே இது ஒழுங்கற்ற நியமனம் என்று பெரியார் இதனைக் கண்டித்தார். 1952 மார்ச் 12-ஆம் தேதி கண்டன நாள் கொண்டாடி, கவர்னருக்குக் கருப்புக் கொடி பிடிப்பதெனப் பெரியார் முடிவெடுத்தார். அதன்படிச் சென்னையில் எம்.கே. தங்கவேலர், ஆற்காடு இளங்குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். போலீசார் தடியடி தர்பார் நடத்திப் பல தோழர்களைக் காயப்படுத்தினர். இந்தப் பிரச்சினையில், திராவிட முன்னேற்றக் கழகம், திட்டமிட்டபடிக் கருப்புக் கொடி பிடிக்கவில்லை. தனித்தன்மையுடன் திராவிடர் கழகம் இந்தப் கருப்புக் கொடிக் கிளர்ச்சியினை நடத்திட வழிவிட்டு, ஒதுங்கிக் கொள்வதாக, அண்ணா அறிவித்தார்.

காங்கிரஸ் மேலிடம், தனது கட்சிக்காரர் எந்தக் காரியத்திற்கு அனுகூலமாயிருப்பாரென ஸ்ரீ பிரகாசாவை அனுப்பியதோ, அதை அவர் செவ்வனே செய்து முடித்தார். காங்கிரஸ் இந்த முறை பெற்றிருந்த வாக்குகள் 66,77,588 ஆகும். ஆனால் காங்கிரசுக்கு எதிர்ப்பாக சென்னை மாகாணத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் 1,26,65,126 ஆகும். எனினும் 156 உறுப்பினர்களை உடைய காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியைக் கவர்னர் அழைத்து மந்திரிசபை அமைக்கக் கேட்டுக் கொண்டார். 166 உறுப்பினர்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத் தமது எண்ணிக்கையை கவர்னரிடம் காட்டியும், உதாசீனம் செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் தமது வழக்கம்போல் திருகிக்கொண்டனர். இந்நிலையில் சிறுபான்மை வாக்குப் பெற்ற, சிறுபான்மைக் காங்கிரஸ் கட்சி, அரியணை ஏறும் வாய்ப்பளிக்கப்பட்டது. தலைவர் யார்?