பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆந்திராவில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து போனதால், இந்த 156 பேரில் சுமார் 50 பேர்தான் அந்தப் பகுதியைச் சார்ந்தவர் இருந்ததால், அவர்களில் யாரும் முந்தைய வழக்கப்படித் தலைவராக முடியவில்லை. இருந்த ஏனைய உறுப்பினர்களில் யாருமே தலைவர் பொறுப்புக்குத் தகுதியானவராகக் காங்கிரஸ்காரர்களுக்குத் தோன்றாததால், அதிலும் குறுக்குவழி தேடினர்.

கொல்லைப்புற வழி என்று பெரியார் அவர்களால் வர்ணிக்கப்பட்டவாறு, சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியாரை மேல்சபை உறுப்பினராக்கிப், பின் கட்சித் தலைவராக்கிச் சென்னை மாகாண முதல்வராகத் திணித்து விட்டனர். தமது வாழ்நாளில் எங்கும், எப்போதும், தேர்தலுக்கு நின்று, பொதுமக்களால், அவர்கள் வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப் பெற்ற வழக்கமே ராஜாஜிக்குக் கிடையாது. எனவேதான் ஆச்சாரியாரின் இந்தக் குறுக்கு வழிக்குக் கொல்லைப்புற வழி என்ற கொச்சையான பெயரே நாட்டில் திலைத்து விட்டது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க கவர்னர், மத்திய சர்க்கார் மந்திரி, சென்னை மாகாண முதன் மந்திரி, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகிய எந்தப் பதவியும் நியமனப் பதவிதான் ஆச்சாரியாருக்கு. அவர் எங்கேயாவது ஓட்டரா என்பது கூடப் பெரியாருக்குச் சந்தேகம். அரசியல் துறையை ஒழுக்கக் கேடாகவும் நாணயக் கேடாகவும் ஆக்குகின்ற இந்தக் காரியம், “மன்னிக்க முடியாத துரோகம்” என்றார் பெரியார்.

எப்படியோ; ஆச்சாரியார் 1952 ஏப்ரல் 11-ல் முதல் மந்திரியானார். முடத் தென்னைமரம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தால் வர்ணிக்கப்பட்ட மாணிக்கவேலர்-தாம் திராவிடநாடு ஒப்பந்தத்தில் காமன்வீல் கட்சிக்காகக் கையெழுத்துப் போட்டிருந்ததும் - ஆச்சாரியார் வீசிய பதவி வலையில் சிக்கிவிட்டார். அந்த வலை விரித்தபடியேதான் இன்னும் காத்திருக்கிறது என்றார் பெரியார். அதற்கேற்பப் பின்னாளில், உழைப்பாளர் கட்சித் தலைவர் இராமசாமி படையாட்சியார் அந்த வலையில் வீழ்ந்தார். ஆகவே இரு வன்னிய குல க்ஷத்திரியத் தலைவர்களும் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவுடன் வாக்குப் பெற்றதற்கு முரணாகக் காங்கிரசுடன் இணைந்தனர். இதில் விதி விலக்காக விளங்கிய கொள்கை வீரர், ஏ.கோவிந்தவாமி ஒருவரே!

(இவர் 1953-ல் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகச் சிறப்புடன் பணியாற்றினார். தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி கண்டார். அண்ணா அமைச்சரவையிலும், கலைஞர் அமைச்சரவையிலும் வீற்றிருந்து, 1969 -ல் மரணமடைந்துவிட்டார். எளிமையும், இனிமையும், உறுதியும் படைத்தவர். இவர்க்குப்பின் இவர் துணைவியார் பத்மாவதி அம்மாள் அதே தொகுதியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரானார்.)