பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இம்மாதிரியான இந்திப் பெயர்ப்பலகை எழுத்துகளைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தார்கொண்டு அழித்தபோது, காங்கிரசாரும், தமிழ் அரசுக் கழகத்தாரும் மண்எண்ணெய் கொண்டு துடைக்கும் பணியினைக் கழக எதிர்ப்பாகச் செய்து வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் ராஜாஜி ஆட்சி, யாரையும் கைது செய்யாமல் விட்டு விட்டது. ஆச்சாரியாருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் கருப்புக்கொடி பிடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தொண்டர்கள் பெரியாரை வேண்டினார்கள். ஆனால், நம்மவர்களே துரோகிகளாக மாறி, அவர்களுடன் சேர்ந்து கொண்ட இழிசெயலைப் பார்க்கும்போது, அவர்களுக்குக் கருப்புக்கொடி போதாது என்று கருதுகிறேன். வேறு ஏதாவது செய்யலாம். வீணே காங்கிரஸ்காரரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லையே? என்றார் பெரியார். நம்முடைய போராட்டம், இந்திய யூனியன் ஆட்சியையே ஒழித்துக் கட்டி, நமது சென்னைராஜ்யத்தை விடுவித்துத், தனிச் சுதந்திர நாடாக்க வேண்டும் என்பதுதானே? என்றும் பெரியார் 9.7.1952 “விடுதலை” தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதினார்.

பின்னர், இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில், கைது செய்யாமல் விட்டதில் ஓரளவு ஏமாற்றமடைந்த பெரியார், இந்தி ஆதிக்கத்தையும், வடநாட்டார் ஆதிக்கத்தையும் ஒருங்கே எதிர்க்கும் ஒரே போராட்டமாக, அடுத்து, இந்திய அரசியல் சட்டத்தையே எரிக்க நேரிடும் என்றார். அவருடைய இந்த முதல் முழக்கம், 7.8.1952, 10.8.1952 “விடுதலை” தலையங்கக் கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுகின்றது. ஆனால், அது எப்போது என்பதைப், பின்னர் அறிவிப்பதாயும் பெரியார் தெரிவித்தார்.

1952 தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துத் தாம் செய்த பிரச்சாரத்தின்போது, பெரியார் சில உண்மைகளை உணர்ந்து கொண்டார். விவசாயிகளிடத்திலும், தொழிலாளர்களிடத்திலும் அவர்கள் நல்லவண்ணம் பிடிப்பு வைத்திருந்தனர். சந்தா வசூலித்தனர். அவ்வப்போது கூலி உயர்வு முதலிய சில்லறைச் சலுகைகளைப் போராட்டத்தின் மூலமாகப் பெற்றுத் தந்து, அவர்களை நிரந்தரக் கூலியாட்களாகவே வைத்திருக்கத்தான் கம்யூனிஸ்டுகளின் உழைப்பு உதவியது; இதைப்பற்றியெல்லாம் பெரியார் தீவிரமாகச் சிந்தித்தார். தென்னாட்டில், அதுவும் தமிழகத்தில், விவசாயிகள் என்றாலும் தொழிலாளர்கள் என்றாலும் அனைவருமே திராவிடர்கள்தாம். இவர்களில் ஆரியர் யாரும் வயலிலோ, ஆலையிலோ, தொழிற்சாலையிலோ வேலை செய்வதில்லை. அவர்களுக்கு சாஸ்திரப் பாதுகாப்பே அப்படித்தான். ஆகவே திராவிட மக்களாகிய வேளாண்மையில் ஈடுபடுவோர் தொழிற்சாலைகளில் உழைப்போர்