பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

232


ஆகியோரின் உரிமையினைப் பெற்றுத்தரத் திராவிடர் கழகச் சார்பில், தொழிற்சங்க ரீதியில், தனித்தனி அமைப்புகள் தேவை எனப் பெரியார் கருதினார். இவை, போட்டித் தொழிற் சங்கங்களாகப், பழைய பாணியிலேயே இருக்கக் கூடாது என்றும் நினைத்தார். அதன் விளைவாகத் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி ரயில்வேமென் யூனியன் ஆகிய இரு தொழிற்சங்கங்களைப் பெரியார், 1952-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். தொழிலாளர்களும் பங்குதாரர்களாக மாறவேண்டும் என்ற கொள்கை பெரியாருடைய தல்லவா?

“நமக்கு வேண்டியது தன்மானமும், இனப்பற்றும், இன உணர்ச்சியும்தான். எதை எடுத்தாலும் இனத்தைக் குறிப்பதாக இல்லை. இருந்தால் ஆரிய இனத்தையோ, அதற்குட்பட்ட கிளையையோ குறிப்பதாக இருக்கிறது. இந்திய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய சோஷலிஸ்ட், இந்திய இந்து மகாசபை... இப்படியே! இப்போது ஏதோ தொழிலாளி, பாட்டாளி மக்களிடையே சிறிது உணர்ச்சி காணப்படுகிறது. இவர்கள் துணிந்து இந்தியத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து வெளிவந்து, திராவிடர் நிறுவனங்களில் சேர வேண்டும். இப்படித்தான் இனி, இனப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வளர்க்க வேண்டும். அதனாலேயே திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி (திராவிட) இரயில்வேத் தொழிலாளர் சங்கம் ஏற்படுத்த யோசனை சொன்னேன். “திராவிட” என்ற பெயரைக் கண்டு யாரும் முகம் சுளிக்க வேண்டாம். அப்படி முகம் சுளிக்கும் அந்தத் துரோகிகள் கூட்டுறவால் நமக்கு நன்மை கிடைக்காது” - என்று பெரியார் எழுதி வந்தார்.

திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கங்களைத் தொடங்கி வைத்தபோது, பெரியார் பேசி வந்ததாவது:- உடலுழைப்பு வேலை செய்கிறவர்கள் எல்லாம் திராவிட மக்கள். பார்ப்பானுக்கும் உடலுழைப்புக்கும் வெகுதூரம். வேறு சில சங்கங்கள் தொழிலாளர்களுக்காக இருந்தாலும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்துக் கொள்ளாதவர்களே அவர்கள். இன்றையத் தொழிலாளி, அன்றாடக் கஞ்சிக்கு அன்றாடம் வேலை செய்பவனாகவே வைக்கப்பட்டிருக்கிறான். போராடிக் கூலி உயர்வு பெற்றாலும் அவனுக்கு என்ன லாபம்? எங்காவது தேர் திருவிழாவுக்குப் போய் அர்ச்சனை செய்துவிடுகிறான்! தொழிலாளிக்கு இரண்டணா அதிகப்படுத்தித் தரும் முதலாளி, பண்டங்களின் விலையை ஏற்றி விடுகிறான். ஆகவேதான், கூலி உயர்வுக்காகப் போராடுவது கேலிக் கூத்து என்கிறேன். நீ ஏன் இப்படிச் தொழிலாளியாகவே இருக்கிறாய்? என்றால்; போன ஜென்மத்தில் செய்த பாவம், என்கிறான், அவனுக்கு உண்மை நிலையை யாரும் எடுத்துச் சொல்வதில்லை. முதலாளியோடு வேண்டுமானால் முட்ட விடுவார்களே தவிர, முதலாளித்துவத்துக்குப்